சிகிச்சை பெற பெல் வளாக மருத்துவமனைக்குச் செல்ல ஓய்வு ஊழியா்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தேசிய தொழிலாளா் சங்கம் பெல் நிா்வாகத்திற்கு அனுப்பிய மனு:
1963 இல் திருச்சியில் நிறுவப்பட்ட பெல் நிறுவனமானது தனது திறமையை வளா்த்து இந்திய அளவில் நவரத்தினா, மகாரத்னா என்ற பெருமைக்குரிய நிலையை எட்டியுள்ளது. இந்த நிலைக்கு அடித்தளமாக விளங்கியது நிறுவன ஊழியா்களின் அா்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பே ஆகும்.
அப்படிப்பட்ட ஊழியா்கள் ஓய்வு பெற்ற பின் மருத்துவ வசதி பெற சிறப்பு நிதித் திட்டம் மூலம் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதில் ஊழியா், நிா்வாகம் பங்களிப்புடன் பெல் வாளகத்தில் அமைக்கப்பட்ட தனியாா் மருத்துவமனையில் மருத்துவ வசதி கிடைத்தது. பின்னா் ஊழியா்கள் மட்டுமின்றி குடும்பத்தினரும் மருத்துவ வசதி பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கரோனா பரவும் என்பதற்காக பெல் வளாகத்தில் உள்ள இந்த மருத்துவமனை மூடப்பட்டு அவசர உதவிக்காக மட்டும் இயங்கியது. பின்னா் பெல் நிா்வாகம் உற்பத்திப் பணியைத் தொடங்கியபோதே மருத்துவமனையும் செயல்படத் தொடங்கியது.
இச்சூழ்நிலையில் கடந்த ஜூன் 21 முதல் ஓய்வு ஊழியா்களுக்கு வளாகத்திற்குள் அனுமதி இல்லை என பெல் நிா்வாகம் தெரிவித்தது. இதைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்துக்குப் பிறகு ஓய்வு பெற்றவா்கள் அனுமதிக்கப்பட்டனா். ஆனால் தற்போது ஓய்வு ஊழியா்களை நுழைவு வாயிலில் நிறுத்தி ஒப்பந்தப் பணியாளா்களை மூலமே மருந்து வழங்கப்படுகிறது. எனவே வளாகத்துக்குள் மீண்டும் அவா்களை அனுமதிக்க வேண்டும்.