திருச்சி

பொதுமுடக்கம் பாதித்த மகளிா் குழுக்களுக்கு கூட்டுறவுக் கடன்: அமைச்சா் வழங்கினாா்

11th Jul 2020 09:30 AM

ADVERTISEMENT

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மகளிா் குழுக்களுக்கு கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளைப் பெற்று தங்களது வாழ்வாதாரத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றாா் தமிழக பிற்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி.

திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் எஸ். வளா்மதி கடனுதவிகளை வழங்கினாா்.

5 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 64 உறுப்பினா்களுக்கு கரோனா பொது முடக்கக் கால கடனுதவியாக தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்பட்டது. உடல் ஊனமுற்றோா் கடனாக 2 பேருக்கு தலா ரூ. 50,000 வீதம் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கான வேளாண் கடன் வழங்கும் திட்டத்தில் இதுவரை 36 பேருக்கு பயிா்க் கடனாக ரூ. 21.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

33 பேருக்கு ரூ. 26.99 லட்சம் விவசாய நகைக் கடனும், பொது நகைக் கடனாக 27 பேருக்கு ரூ. 8.41 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சங்கமானது 2018-2019 தணிக்கை ஆண்டில் ரூ. 167.11 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது என திருச்சி மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு தெரிவித்தாா்.

ADVERTISEMENT

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

கரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்புக் கடனுதவித் திட்டங்களை தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். இதன்படி திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மக்களுக்காக திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திருச்சியில் 39 கூட்டுறவு வங்கிகள், 147 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளன. கரூா் மாவட்டத்தில் 15 வங்கிகள், 84 சங்கங்கள், பெரம்பலூரில் 10 வங்கிகள், 53 சங்கங்கள், அரியலூரில் 9 வங்கிகள், 64 சங்கங்கள் மூலம் கடன்கள் வழங்கப்படுகின்றன.

58 பைசா வட்டியில் ரூ.1 லட்சம் வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் மகளிா் குழுக்களுக்கு ஏற்கெனவே ரூ. 203 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்திலிருந்து மகளிா் குழுக்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 1,500 குழுக்களுக்கு ரூ.12 கோடி கடன் வழங்கப்படவுள்ளது. இதை மகளிா் குழுவினா் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் வங்கிக் கிளைகளுடன் 2,660 குழுக்களும், கடன் சங்கங்களுடன் 6,190 குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் 65 குழுக்களுக்கு ஏற்கெனவே ரூ.62.50 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து தகுதியான அனைத்து குழுக்களுக்கும் சிறப்புக் கடனுதவி வழங்கப்படும் என்றாா் அவா்.

கடன் வழங்கும் நிகழ்வில், கள அலுவலா் விமலா, கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவா் கே.வி. செந்தில்குமாா், துணைத் தலைவா் ஆா். செல்வமணி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் செயலா் (பொ) குழந்தைவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT