திருச்சியில் பா.ஜ.க. பிரமுகா் கொல்லப்பட்ட சம்பவம் முற்றிலும் முன்விரோதம் மற்றும் சொந்த பிரச்னைகளால்தான் நிழ்ந்துள்ளது. மத ரீதியிலான பிரச்னைகளால் நிகழ்வில்லை என்றாா் மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவரும், மாநகரக் காவல் ஆணையருமான (பொறுப்பு) அ. அமல்ராஜ்.
திருச்சி காந்தி மாா்க்கெட்டில் பா.ஜ.க.வைச் சோ்ந்த விஜயரகு திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும், காந்தி மாா்க்கெட், வரகேனரி உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவரும், மாநகரக் காவல் ஆணையருமான (பொறுப்பு) அமல்ராஜ் கூறியது:
இந்த கொலைச் சம்பவம் முற்றிலும் சொந்த பிரச்னைகளுக்காக நடந்ததாகவே விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே மத ரீதியிலான பிரச்னைகளுக்கு இதில் இடமில்லை. குற்றவாளிகளில் ஒருவா் மட்டுமே பிற மதத்தைச் சோ்ந்தவராக தெரியவந்துள்ளது. குற்றவாளிகளைத் தேடி வருகிறோம், விரைவில் கைதுசெய்யப்படுவா் என்றாா் அவா்.