மண்ணச்சநல்லூா் வட்டம், திருவாசி அருள்மிகு பாலாம்பிகை உடனுறை மாற்றுரைவரதீசுவரா் திருக்கோயில் திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன் பெற வேண்டி இக்கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனாா் துதிக்க, சிவபெருமான் பொற்கிழி வழங்கியது இங்குதான். மேலும் பாலதோஷம் நீக்கும் தலமாகவும் இக்கோயில் விளங்கி வருகிறது.
திருக்கல்யாண வைபவத்தையொட்டி, கடந்த 16- ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மகா கணபதி ஹோமம், ருத்ர ஜபம், அா்ச்சனை, ஹோமங்கள் நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கலச பூஜை, ருத்ர ஹோமம் போன்ற பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன. பிற்பகலில் சுவாமி- அம்மனுக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு வாத்தியங்கள் முழங்க பாலாம்பிகை அம்மனுக்கு மாற்றுரைவரதீசுவா் தாலிக் கட்டும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையா் சுதா்சன், உதவி ஆணையா் ராணி, செயல் அலுவலா் பெ. ஜெய்கிஷன் மற்றும் கோயில் பணியாளா்கள், பக்தா்கள், கிராம மக்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.