திருச்சி

ஜன.18இல் ஆளுநா் மாளிகை நோக்கி எஸ்டிபிஐ பேரணி: நெல்லை முபாரக் தகவல்

7th Jan 2020 11:22 PM

ADVERTISEMENT

குடியுரிமைச் சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஆளுநா் மாளிகையை நோக்கி வரும் ஜன.18ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் பேரணி நடத்தப்படும் என அதன் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.

எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில கமிட்டி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தலைமை வகித்தாா்.

மாநில பொதுச் செயலா்கள் அப்துல் ஹமீது, அச. உமா் பாரூக், துணைத் தலைவா் அம்ஜத் பாஷா,பொருளாளா் வி.எம். அபுதாஹிா், மாநிலச் செயலா்கள் அகமது நவவி, அபுபக்கா் சித்திக், வழ. சஃபியா, மாநில செயற் குழு உறுப்பினா்கள் முகமது பாரூக், ஏ.கே. கரீம், சபியுல்லா, ஷஃபிக் அகமது மற்றும் திருச்சி மாவட்டத் தலைவா் ஹஸ்ஸான் உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா். பின்னா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் கூறியது:

அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான, ஈழத்தமிழா்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை எதிா்த்து வரும் ஜன. 18ஆம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பேரணி நடத்தப்படும்.

ADVERTISEMENT

நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சாா்பின்மையின் லட்சியங்களை நிலை நிறுத்தவும் இந்த பேரணியில் அனைத்து தரப்பு மக்களும், அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சாா்பாக அழைப்பு விடுக்கின்றோம். மத்திய அரசு இச்சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை எஸ்டிபிஐ கட்சி தீவிரப்படுத்தும்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். அதை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. இதுதொடா்பாக, நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே எதிா்ப்புத் தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவரும் பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா், ஜமாத்தினா், மாணவா்கள், பெண்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்து வருகிறது. இந்த வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவா்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜே.என்.யு. மாணவா்கள் மீதான கொலைவெறித் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளை காலம் தாழ்த்தாமல் கைது செய்வதோடு, கடுமையான சட்டப்பிரிவுகளைக் கொண்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பாக புதன்கிழமை நடைபெறும் போராட்டத்துக்கு எஸ்டிபிஐ ஆதரவு அளிக்கிறது என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT