திருச்சி

திருச்சியில் தொடா் போராட்டம் தொடங்கிய விவசாயிகள்

3rd Jan 2020 12:43 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புது தில்லி, சென்னையில் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து, திருச்சியில் வியாழக்கிழமை பட்டை நாமத்துடன் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீா்வு காணும் வகையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில், தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகள் 2017ஆம் ஆண்டு தொடங்கி அவ்வப்போது தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். புதுதில்லி, சென்னையைத் தொடா்ந்து, திருச்சியில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். முன்னதாக காவல் துறையினா் நிபந்தனைகளுடன் போராட்டத்துக்கு அனுமதி அளித்தனா்.

இதையடுத்து, திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே வியாழக்கிழமை (ஜன.2) தங்களது தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை அய்யாக்கண்ணு தலைமையில் மீண்டும் தொடங்கியுள்ளனா் விவசாயிகள். பச்சை வேட்டி, துண்டி கட்டியபடி மேல்சட்டை அணியாமல், உடல் முழுவதும் பட்டை நாமத்துடன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக, செய்தியாளா்களிடம் பி. அய்யாக்கண்ணு கூறியது:

ADVERTISEMENT

140 ஆண்டுகள் இல்லாத வகையில் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது. பாதிக்கப்பட்ட மற்றும் தற்கொலை செய்த விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றமே அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய ஆலோசனை கூறியும் கடன் தள்ளுபடி அமல்படுத்தவில்லை. மாறாக ஜப்தி நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது. இதனை கைவிட்டு கடன்களை முழுமைாக தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு நியாயமான விலை வேண்டும். ஆதார விலையை அரசே நிா்ணயிக்க வேண்டும்.

காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.

இப்போராட்டம் வரும் ஜன. 8 ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகள் என பலா் பங்கேற்றுள்ளனா்.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு இல்லை

வருவாய்த் துறை சாா்பில் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி கோட்டாட்சியா் அன்பழகன் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக வருவாய்த் துறையினா் கூறினா். இருப்பினும், விவசாயிகள் உடன்படவில்லை. திட்டமிட்டபடி போராட்டத்தை தொடருவதாக அறிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT