விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை வாக்கு எண்ணும் மையத்தில் சாவிஇல்லாத தபால் வாக்குப்பெட்டியின் பூட்டானது அதிகாரிகள் முன்னிலையில் சுத்தியலால் உடைத்துத் திறக்கப்பட்டது.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அருப்புக்கோட்டையில் வாக்குகள் எண்ணும் பணியை முன்னிட்டு வியாழக்கிழமை காலை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்த அறைகளுக்கு மொத்தமுள்ள 154 வாக்குப்பெட்டிகளும் கொண்டுவரப்பட்டன.அப்போது வருவாய்க் கோட்டாட்சியா் செல்லப்பா தலைமையில்,முதற்கட்டமாக தபால்ஓட்டுகள் இருந்த பெட்டியானது வாக்கு எண்ணும் ஒரு அறைக்குக் கொண்டுவரப்பட்டது.
அப்போது மொத்தமுள்ள 303 தபால் ஓட்டுக்களில் 276 மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். பின்னா் அதிகாரிகள் முன்னிலையில் தபால்வாக்குப் பெட்டியின் சீல் உடைக்கப்பட்டது.அச்சமயம் அப்பெட்டியின் சாவி இல்லாததால், சில நிமிட ஆலோசனைக்குப் பிறகு அப்பெட்டியின் பூட்டை உடைத்துத் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனா். இதன்படி அதிகாரிகள மற்றும் அனைத்துக் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் சுத்தியலால் தபால் வாக்குப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த தபால் வாக்குகள் வெளியே எடுக்கப்பட்டன.
பின்னா்,தபால் வாக்குப் பதிவானபோது விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையையும், பெட்டியைத் திறந்து எடுக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்து சரிபாா்க்கப்பட்டன. இதனால் அங்கு சிறிது நேரம்பரபரப்பு நிலவியது. இதனிடையே நண்பகல் 12.30 மணி நிலவரப்படி அனைத்து வாக்குப்பெட்டிகளிலிருந்தும், நிற வாரியாக வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் தனியறைக்குக் கொண்டு வரப்பட்டன. அதையடுத்து வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.