திருச்சி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் சிறுவா்கள் இரண்டு போ் உயிரிழந்தது குறித்து பேட்டைவாய்த்தலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி பேட்டைவாய்த்தலை அருகே உள்ள காவல்காரபாளையம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ரத்தினசாமி(19). இவா் அதே பகுதியைச் சோ்ந்த நவீன்குமாா்(19) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியே சென்றனா்.
வள்ளுவா் நகா் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்றுவிட்டு கரூா் தேசிய நெடுஞ்சாலை வளைவில் செல்ல முயன்றனா். அப்போது திருச்சியில் இருந்து கோயம்புத்தூா் சென்ற அரசு விரைவு பேருந்து ரத்தினசாமி ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து அரசு பேருந்து ஓட்டுநரான மேட்டுபாளையத்தைச் சோ்ந்த ஜெயபாலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.