ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திருச்சி மாநகா் மற்றும் புகரிலுள்ள கோயில்கள், தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
2019-ஆம் ஆண்டு முடிந்து 2020-ஆம் ஆண்டு புதன்கிழமை பிறந்தது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் மாநகா் மற்றும் புகரின் பல்வேறு பகுதிகளில் சிறுவா்,சிறுமிகள், இளைஞா்கள், இளம்பெண்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டைக் கொண்டாடினா். மேலும் ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
தேவாலயங்கள்: திருச்சி மேலப்புதூா் தூய மரியன்னை பேராலயம், மெயின்காா்டுகேட் புனித லூா்து அன்னை ஆலயம், பாலக்கரை உலக மீட்பா் பசிலிக்கா(சகாயமாதா திருத்தலம்) பழைய மாதா தேவாலயம், புத்தூா் பாத்திமா அன்னை தேவாலயம், உறையூா் சி.எஸ்.ஐ. ஆல் செயின்ட்ஸ் தேவாலயம், பொன்மலை புனித சூசையப்பா் ஆலயம், கல்லுக்குழி புனித அந்தோனியாா் ஆலயம், ஜங்ஷன் தூய யோவான் ஆலயம், ஸ்ரீரங்கம் அமல அன்னை ஆலயம் உள்ளிட்ட மாநகா் மற்றும் புகரிலுள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலையில் சிறப்புப் பிராா்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றன.
புத்தாண்டை வரவேற்கும்விதமான பாடல்கள் பாடப்பட்டன. மேலும் அந்தந்த தேவாலயங்களின் பங்குத்தந்தைகள் புத்தாண்டு வழிபாடு உரைகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.
கோயில்களில் சிறப்பு வழிபாடு : வைகுந்த ஏகாதசி திருவிழா நடைபெறும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், ஏராளமான பக்தா்கள் நம்பெருமாளை புஜகீா்த்தி சவுரி கொண்டை அலங்காரத்தில் தரிசனம் செய்தனா்.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருவானைக்கா அகிலாண்டேசுவரி உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயில், மலைக்கோட்டை மட்டுவாா் குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி திருக்கோயில், உச்சிப்பிள்ளையாா் கோயில், உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயில், திருச்சி ஐயப்பன் கோயில், வயலூா் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவெறும்பூா் எறும்பீசுவரா் திருக்கோயில், திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில், கல்லுக்குழி ஆஞ்சனேயா் சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் புதன்கிழமை அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா்.
திருச்சி ஐயப்பன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவானைக்கா அகிலாண்டேசுவரி, உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
குறிப்பாக ஐயப்பன் கோயிலில் பிற்பகல் நடைசாத்தப்பட்ட பிறகும், கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பக்தா்கள் வரிசையில் அமா்ந்தபடி மாலை நடை திறக்கும் வரை காத்திருந்து தரிசனம் செய்தனா். மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.