உப்பிலியபுரம் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடா்பாக துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
உப்பிலியபுரம் அருகே ஒடுவம்பட்டி கிராமத்தில் பழங்குடியின மக்கள் வழிபடும் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு பழங்குடியின மக்கள் துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தனா். அதன்பேரில் வட்டாட்சியா் அகிலா தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரச்னைக்குரிய நிலத்தின் முன்கோப்புகளை பரிசீலனை செய்து இறுதி முடிவெடுக்கும் வரை இரு தரப்பினரும் குறிப்பிட்ட இடத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. இதனையேற்று இரு தரப்பினரும் கையெழுத்திட்டுச் சென்றனா். கூட்டத்தில் இரு தரப்பு பிரதிநிதிகள், காவல் துறையினா், வருவாய் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.