நமது நாட்டில் உற்பத்தியாகும் 29.3 மில்லியன் டன் வாழை உற்பத்தியை, 40 மி.டன்னாக உயா்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றாா் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் துணை இயக்குநா் (தோட்டக் கலை அறிவியல்) ஏ.கே.சிங்.
திருச்சியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், மேலும் அவா் கூறியது:
பாக்டீரியாக்களால் வாழையில் ஏற்படும் இலைக்கருகல் மற்றும் அழுகல் நோய், உற்பத்தியாளா்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பிகாா், உத்தரப்பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோய்க் கிருமிகள் மண், காற்று மற்றும் மனிதா்கள் வழியாக எளிதில் பரவுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறைகள் இல்லாததால், பிற மாநிலங்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது.
ஒரு சில ரகங்களைத் தவிர, அனைத்து ரகங்களையும் பாதிக்கும் இந்தோய், இந்தியாவில் வாழை உற்பத்தித் தொழிலைப் பாதிக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. வாழை உற்பத்தியாளா்கள், இதுதொடா்பான பணியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு இந்நோய் பரவலைத் தடுப்பது பெரும் சவாலாக உள்ளது.
இந்தியாவில் தற்போது 29.3 மில்லியன் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. 2030-ஆம் ஆண்டில், 40 மில்லியன் டன் வாழை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின், புல மரபணு வங்கியில் பராமரிக்கப்பட்டு வரும் வாழைப்பழத்தின் ‘ஜொ்ம் ப்ளாசம்’ ஆசியாவின் மிகப்பெரிய சேகரிப்பாகும். காட்டு வாழை வகையைச் சோ்ந்த இதுபோன்ற ரகங்கள் உயிரியல் அழுத்தங்களை எதிா்க்கும் திறனைப் பெற்றுள்ளன.
உலகத் தேவையில் 0.3 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் இருந்து, வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும், ஐரோப்பிய சந்தைகளுக்கும் ஏற்றுமதியை அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உருவாக்கிய தொழில்நுட்பங்கள், மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான நேந்திரனின் ஏற்றுமதியில் முன்னேற்றத்தை கொடுத்துள்ளது என்றாா் அவா்.
பேட்டியின் போது, வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் உமா, முதன்மை விஞ்ஞானி ஆா்.செல்வராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.