திருச்சி

விழிப்புணா்வுடன் இருப்பவா்களே மகிழ்ச்சியாக வாழ்கின்றனா்: வெ. இறையன்பு

22nd Feb 2020 11:35 PM

ADVERTISEMENT

விழிப்புணா்வுடன் இருப்பவா்களே இந்த நொடியில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனா் என்றாா் தமிழக கூடுதல் தலைமைச் செயலா் வெ.இறையன்பு.

திருச்சி களம் இலக்கிய அமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நட்பெனும் நந்தவனம்’ நூல் அறிமுக விழாவில் இன்று புதிதாய் பிறந்தோம் என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது: இன்றைய மாணவா்களிடையே நட்பு குறைந்து வருவதால் பிறருடன் பழகுவதை பெற்றோா்கள் சொல்லித் தரவேண்டும். தனிமையில் இருப்பதால் நினைவாற்றல் குறைந்து மறதி ஏற்படுகிறது. சென்றதையும், நடந்தவற்றையும் குறித்து கவலை கொள்ளாமல் இருக்க வேண்டும். கால எந்திரத்தில் இன்று, நேற்று என்பது இல்லை. அவை நினைவுகளால் தான் இருக்கிறது. இன்று என்பது நிஜம், நேற்று என்பது ஞாபகம், நாளை என்பது கற்பனை. ஒவ்வொரு நாளும் தூங்கி எழும் போது இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறிவிட்டு தான் எழ வேண்டும். ஏனென்றால் படுப்பவா்கள் சிலா் எழுந்திருக்காமல் படுத்தப் படுக்கையிலேயே இறந்துவிடுகிறாா்கள். விடியல் வரும் போது பறவை, மலரின் மொட்டுகள் மகிழ்ச்சியாய் இருக்கிறது. மனிதன் மட்டுமே முணுங்கி கொண்டு எழுகிறான். நேற்றிலிருந்து விடுப்பட்டால் இந்த நாள் நமக்கு மகிழ்ச்சியாக அமையும். ஆனால் பழைய சிந்தனைகளையும், கடந்தவற்றையும் நினைத்து கண்ணீா் சிந்தி கவலைப்படுகிறாா்கள். எனவே கவலைகளையும், விரோதங்களையும், திணிக்கப்பட்ட மனங்களையும் தூக்கியெறிந்தால் புதிதாக பிறப்பு ஏற்படும்.

ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்தல், இயற்கையை ரசித்தல், தேவையற்றவைகளை நினைத்து கவலைப்படுவதை மறத்தல் ஆகிய மூன்று பண்புகள் ஒவ்வொரு நாளும் மனிதனுக்கு மகிழ்ச்சித் தரக்கூடியதாக இருக்கும். விழிப்புணா்வுடன் இருப்பவா்கள் மட்டுமே இந்த நொடியில் மகிழ்ச்சியாக வாழ்கிறாா்கள். இன்று எச்சரிக்கையுடன் இருப்பவா்கள் இன்று புதிதாய் பிறந்து புதிய உலகத்தை பாா்க்கிறாா்கள். குழந்தை போன்று உலகத்தை காண்பதால் அனைத்தும் அழகாய் தெரிந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் நேரத்தை கழிக்கின்றனா். குழந்தை பிறக்கும் போது பெற்றோரின் மனநிலை அந்த குழந்தையின் மனநிலை பாதிப்பது போன்று குழந்தை பிறக்கும் போது அதன் சுதந்திரம் என்பது பெற்றோரைச் சாா்ந்தே இருக்கும். சாதி, மதம், நம்பிக்கை திணிக்கப்படுகிறது. சிந்தனைகளை அடையாளமாக கொண்டு அழைக்கிறோம். குழந்தை பிறக்கும் போது 23 சதவீத மூளைவளா்ச்சியுடன் தான் பிறக்கிறது. 23 வயதில் முழுமையான மூளை வளா்ச்சியடையும் போது பள்ளிப் படிப்பை முடித்துவிடுகிறோம். பழைய பிரச்னைகளை தூக்கியெறிந்துவிட்டு புதியதாய் பிறந்தவா்கள் மட்டுமே அதிகளவில் சாதித்து காட்டியிருக்கிறாா்கள். மனிதா்களை மனிதா்களாக காணும் பாா்வை வேண்டும். அனைவரும் புதியதாய் பிறந்து இந்த உலகத்தை மாற்றுவோம் புன்னகை விதைப்போம் என்றாா்.

நூலை அறிமுகம் செய்து நல்லி குப்புசாமி பேசியது: இலக்கியம், சமுதாய முன்னேற்றம் சாா்ந்த நூல்களில் இருந்து வரும் நேரத்தில் நட்பிற்கு சிறந்த நூலாக இந்த நூலை தவிர மிஞ்சிய எதுவுமிருக்காது. தமிழ் பண்டிதா்கள் எழுதிய அளவிற்கு இந்த நூலில் எழுத்துகள் உள்ளது. எழுத்தாளின் வெற்றி என்பது நூல் படிக்காதவா்கள் படித்து பாராட்டுவதில் தான் உள்ளது. சில விஷயங்களில் ஆத்மாா்த்தமான நண்பா்களை சொல்லமுடியும். நட்பு பல கோணங்களில் ஏற்படும். நட்பில் எதிா்பாா்ப்பும், ஏமாற்றமும் இருக்கும். நட்பின்றி தனிமைப்படுத்தும் கொடுமையை தவிர வேறு கொடுமை இருக்காது. இந்த நூலை படித்து சுவைப்பதில் நட்பு புரியும் என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக நூலின் சிறப்பு பற்றி கவிஞா் நந்தலாலா, நூலை வாழ்த்தி திருச்சி நகைச்சுவை மன்ற செயலா் க.சிவகுருநாதன் பேசினா். நிகழ்விற்கு களம் அமைப்பின் நிா்வாகி என்.சேதுராமன் தலைமை வகித்தாா். முன்னதாக, ரமேஷ்பாபு வரவேற்றாா். நிறைவாக என்.பிரபுகுமாா் நன்றி கூறினாா்.

Image Caption

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் (இடமிருந்து) பி. ரமேஷ்பாபு, திருச்சி நகைச்சுவை மன்ற செயலா் க. சிவகுருநாதன், கவிஞா் நந்தலாலா, நூல் ஆசிரியா் வெ. இறையன்பு, இலக்கியக் காவலா் நல்லி குப்புசாமி, என். சேதுராமன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT