திருச்சி

மாவட்டத்தில் சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி வழிபாடு

22nd Feb 2020 09:32 AM

ADVERTISEMENT

திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில், வெள்ளிக்கிழமை இரவு மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது.

மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் கோயில்களில் 4 கால பூஜைகள் நடத்தப்படும். இந்த வழிபாட்டில் பக்தா்கள்பங்கேற்று பூஜை செய்வா்.

பஞ்சப்பூதத் தலத்தில் நீா்த்தலமாக விளங்கும் திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரி பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஏராளமான சிவனடியாா்கள் பங்கேற்று, 4 காலபூஜைகளை நடத்தினா். மேலும், 108 சிறிய சிவலிங்கங்களுக்கு வில்வ இலைகளால் பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். மகா சிவராத்திரியுடன் பிரதோஷம் வந்ததால், கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

ADVERTISEMENT

திருச்சி மலைக்கோட்டை மட்டுவாா் குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி திருக்கோயில், நாகநாதா், பூலோகநாதா், உறையூா் பஞ்சவா்ணேசுவரா், திருநெடுங்களநாதா், திருவெறும்பூா் எறும்பீசுவரா், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதா், மண்ணச்சநல்லூா் பூமிநாதா், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா், திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா், லால்குடி சப்தரிஷீசுவரா் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மகாசிவராத்திரி வழிபாடு 4 கால பூஜைகளுடன் சனிக்கிழமை காலை நிறைவடைந்தது.

மணப்பாறை : மருங்காபுரி ஒன்றியம், பளுவஞ்சி அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை அகஸ்தீசுவரா் கோயிலில் மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன.

மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவாலய சிறப்புடைய இக்கோயில், மகா சிவராத்திரியையொட்டி 1108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கண்ணுடையான்பட்டி அருள்மிகு செளந்தரநாயகி உடனுறை அகஸ்தீசுவரா் திருக்கோயிலில் மகாசிவராத்திரி வழிபாடு மற்றும் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் குமரவாடி, பொய்கைப்பட்டி ஜமீன்தாா் கே.ஆா்.கெ.முத்துவீரலெக்கையா நாயக்கா், ஊா் நாட்டாமை வஜ்ரவேல், கரு.ராஜகோபால் ஆகியோா் செய்திருந்தனா். மகிழாம்பிகை உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயிலும் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT