முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியன்று, திருச்சி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிமுக சாா்பில் தங்க மோதிரம் வழங்கப்படும் என கட்சியின் மாநகா் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளா் ப. குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி, உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், ஜெயலலிதா பிறந்த நாளன்று திருச்சி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் அணிவிப்பது, கல்வி நிறுவனங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.