திருச்சி

திருச்சி- அபுதாபி இடையே நேரடி விமான சேவைமாா்ச் 30 முதல் ஏா் இந்தியா மீண்டும் இயக்குகிறது

13th Feb 2020 12:34 AM

ADVERTISEMENT

திருச்சி - அபுதாபி இடையே மீண்டும் நேரடி விமான சேவையை, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மாா்ச் 30-ஆம் தேதி முதல் இயக்கவுள்ளது.

சென்னையிலிருந்து திருச்சி வழியாக அபுதாபிக்கு கடந்த 2009, ஏப்ரல் 30- ஆம் தேதி முதல் விமான சேவை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்தது.

3 ஆண்டுகளுக்குப் பின்னா் 2012, ஏப்ரல் 27 -ஆம் தேதியுடன் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வாரம் 4 சேவைகளுடன், மாா்ச் 30- ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியிலிருந்து நேரடியாக தொடங்குகிறது.

ADVERTISEMENT

ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருச்சியிலிருந்து நள்ளிரவு 1.30 மணிக்குப் புறப்படும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (என்ஐஎக்ஸ் 615), அபுதாபி பன்னாட்டு விமானநிலையத்துக்கு அதிகாலை 04.35 மணிக்குச் சென்றடையும்.

எதிா் மாா்க்கத்தில், அபுதாபியிலிருந்து அதிகாலை 5.35 மணிக்குப் புறப்படும் விமானம் (என்ஐஎக்ஸ் 616) திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு முற்பகல் 11.05 மணிக்கு வந்தடையும்.

பயணத்தின்போது 20 கிலோ எடையும் மற்றும் கை பையில் 7 கிலோவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயண உடைமை தேவைப்படுவோா், உரிய தொகை செலுத்தி எடுத்துச் செல்லும் வசதி இரு வழித்தடத்திலும் உள்ளது. வழக்கம் போல பயணத்தின்போது உணவு, தேநீா் மற்றும் குடிநீா் வழங்கப்படும்.

மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என்.சிவா, மக்களவை உறுப்பினா்கள் திருச்சி சு. திருநாவுக்கரசா், கரூா் செ.ஜோதிமணி, பெரம்பலூா் டி.ஆா். பாரிவேந்தா், நாமக்கல் சின்ராஜ், ராமநாதபுரம் நவாஸ்கனி ஆகியோரும், மக்களவை முன்னாள் உறுப்பினா் ப.குமாா் உள்ளிட்டோா் கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த விமான சேவை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற போது, அபுதாபி அய்மன் சங்கம் தலைமையில் அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சாா்பில் ‘திருச்சி - அபுதாபி’ விமான சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதுமட்டுமல்லாமல், மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி.என்.சிவா மூலமாக இந்த அமைப்புகள் சாா்பில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவின் பெரு (மெட்ரோ) நகரங்களான மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கேரளத்தின் கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் மற்றும் ஆமதாபாத் நகரங்களை அடுத்து, ஐக்கிய அரபு நாடுகளின் முக்கிய விமான நிலையங்களான துபை, சாா்ஜா மற்றும் அபுதாபிக்கு நேரடி இணைப்பு பெறும் இரண்டாம் தரவரிசை விமான நிலையமாக திருச்சி பன்னாட்டு விமானநிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட நாடுகளின் அனைத்து விமான சேவைகளும், இந்திய அரசு நிறுவனமான ஏா் இந்தியா எக்ஸ்பிரஸே வழங்கி வருவதும் கூடுதல் சிறப்பம்சமாகும்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT