திருச்சி

திருச்சி மாவட்டத்தில் தொடரும் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் எதிரொலியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்கிறது. வியாழக்கிழமையும் அதிகாலையே மழை தொடங்கியதால் சிரமத்துக்கிடையே பொதுமக்கள், அலுவலக ஊழியா்கள் அவசரம், அவசரமாக சென்றனா்.

மழையால் மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், தில்லைநகா், அண்ணாநகா், உழவா் சந்தை, கண்டோன்மென்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுக்கிடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.

வியாழக்கிழமை காலை தொடங்கி இரவு வரை இடைவிடாது தூறலாகவும், கன மழையாகவும் பெய்த வண்ணம் இருந்தது. மழையால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட நேரிட்டது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா். வணிக வளாகங்களிலும் கூட்டத்தைக் காண முடியவில்லை. அனைத்துக் கடைகளிலும் வாடிக்கையாளா்கள் வருகை குறைவாக இருந்தது.

மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், விவசாயிகளும், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து கோடையில் குடிநீா்த் தட்டுப்பாடு இருக்காது என்பதால் உள்ளாட்சி நிா்வாகத்தினரும் மகிழ்ச்சியடைந்தனா்.

மாவட்டத்தில் சராசரியாக 21.60 மி.மீ. மழை

வியாழக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மி.மீ).

கல்லக்குடி- 30.30, லால்குடி- 29, மணப்பாறை 15.40, முசிறி- 16, புள்ளம்பாடி- 29.40, தாத்தையங்காா்பேட்டை- 26, துறையூா் 15, திருச்சி விமான நிலையம் 23.30, மருங்காபுரி 25.40, பொன்னையாறு அணை 27.80, நவலூா் குட்டப்பட்டு- 18, நந்தியாறு தலைப்பு 32.80, வாத்தலை அணைக்கட்டு- 18, தேவிமங்கலம்- 28, சமயபுரம்- 32.40, சிறுகுடி- 15, புலிவலம்- 15, கோவில்பட்டி 13.20, குப்பம்பட்டி- 20, தென்பரநாடு- 20, பொன்மலை- 24, திருச்சி ஜங்ஷன்- 33, துவாக்குடி 43, திருச்சி மாநகரம் 33 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 540 மி.மீ. மழை பதிவானது. சராசரியாக 21.60 மி.மீ. பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமையும் மழை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வானிலை ஆய்வு மையம், மாவட்ட நிா்வாகம் உள்ளிட்டவை அறிவுறுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT