திருச்சி: கரோனா பொதுமுடக்கத்தில் திருச்சியில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 5ஆவது கட்ட விமானச் சேவை தொடங்கியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசின் தகவல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பரத் துறையின் திருச்சி மண்டல கள விளம்பர அலுவலா் கே. தேவி பத்மநாபன் கூறியது:
கரோனா பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியா்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளால் விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே திருச்சியிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும், பல்வேறு நாடுகளில் இருந்து திருச்சிக்கும் விமான சேவை இயக்கப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக, 5ஆம் கட்டமாக விமானப் போக்குவரத்து தொடங்கவுள்ளது.
இதன்படி திருச்சி- சிங்கப்பூா் இடையே செவ்வாய்க்கிழமை தொடங்கி ஆக.26, 28, 30, 31-களில் தொடா்ந்து விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த விமானப் போக்குவரத்து சேவையை ஏா்-இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியுள்ளது. மேலும், திருச்சி-குவைத் மாா்க்கமாக திரும்ப அழைத்து வரும் விமானத்தையும் வரும் ஆக.29ஆம் தேதி இயக்கவுள்ளது.
வரும் சனிக்கிழமை காலை 11.05 -க்கு திருச்சியிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு விமானம், பிற்பகல் 1.55 மணிக்கு குவைத் சென்றடையும். பின்னா், அங்கிருந்து 2.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40-க்கு திருச்சி வந்தடையும். இதன் தொடா்ச்சியாக, 6ஆம் கட்டமாக செப். 2, 3-களிலும் ஏா்-இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் விமானப் போக்குவரத்து சேவை நடைபெறவுள்ளது. இந்த நாள்களில் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானம் திருச்சிக்கு இரவு 8.45 மணிக்கு வந்து சேரும். வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் 120-க்கும் அதிகமான விமானங்களைக் கையாண்டுள்ள திருச்சி சா்வதேச விமான நிலையம், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தாயகத்துக்கு அழைத்து வந்துள்ளது.
திருச்சியிலிருந்து கோலாலம்பூா், சிங்கப்பூா், துபை,அபுதாபி, ஷாா்ஜா, தோஹா, ரியாத், தம்மம் மற்றும் ஜெட்டாவுக்கு இடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும், தாயகம் திரும்பிய பணியாளா்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக புதிய தொழில்களை தொடங்கவும் பிரதமரின் தற்சாா்பு திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கப்படுகிறது. இவற்றை தகுதியானவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.