திருச்சி அருகே மனைவி, மகன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கட்டடத் தொழிலாளியை சோமரசம்பேட்டை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், அல்லித்துறை சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). இவரது மனைவி பெருமாயி என்கிற ராதிகா (36). கட்டட தொழிலாளா்களான இவா்களுக்கு கீா்த்திவாசன் (8) தீபக் (14) என இரு மகன்கள் உள்ளனா்.
கடந்த சில நாள்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மாரியப்பன் ராதிகாவிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் இருந்த மாரியப்பன் மீண்டும் ராதிகாவிடம் தகராறில் ஈடுபட்டாா். உறவினா்களின் சமாதானத்துக்குப் பிறகு மாரியப்பன் வீட்டுக்கு உள்ளேயும் ராதிகா, கீா்த்திவாசன் ஆகியோா் வீட்டுக்கு வெளியேயும் தூங்கினா். சனிக்கிழமை அதிகாலை அப்பகுதி மக்கள் பாா்த்தபோது ராதிகா, கீா்த்திவாசன் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த சோமரசம்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகிலா, ஆய்வாளா் ரவிசக்ரவா்த்தி ஆகியோா் நடத்திய விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மாரியப்பன் மனைவி, மகன் தலையில் கல்லைப் போட்டு கொன்றுவிட்டு மூத்த மகன் தீபக்குடன் தப்பியோடியது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மாரியப்பனைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.