திருச்சி

கடந்த 25 ஆண்டுகளில் பொன்மலையில் 400 டீசல் என்ஜின்கள் முழுப் பராமரிப்பு

23rd Aug 2020 08:20 AM

ADVERTISEMENT

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து கடந்த 25 ஆண்டுகளில் 400 டீசல் என்ஜின்கள் முழுப் பராமரிப்பு செய்து பொதுத் துறை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி பொன்மலை பணிமனையானது டீசல் என்ஜின், கேரேஜ் தயாரிப்புகளுக்கு நாட்டின் முன்மாதிரியான பணிமனையாக விளங்குகிறது.

இப்பணிமனையிலிருந்து தென்மேற்கு, தென்-மத்திய, தெற்கு உள்ளிட்ட ரயில்வே மண்டலங்களுக்கு ஆண்டுதோறும் டீசல் என்ஜின்கள் தயாரித்தும், முழுப் பராமரிப்பு செய்தும் அனுப்பப்படுகிறது.

நாட்டில் பல்வேறு ரயில்வே பணிமனைகளில் டீசல் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டாலும், பொதுத் துறை நிறுவனங்களுக்கு டீசல் என்ஜின்கள் அனுப்பி வைத்து, ரயில்வேக்கு வருவாய் ஈட்டுவதாக பொன்மலை பணிமனை விளங்குகிறது.

ADVERTISEMENT

25 ஆண்டுகளில் 400 என்ஜின்கள்: ஆண்டுதோறும் 120 டீசல் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றில் 20 டீசல் என்ஜின்கள் இந்திய எஃகு ஆணையம்,தேசிய அனல் மின் கழகம், இந்திய அலுமினிய நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. முதன் முதலாக டீசல் என்ஜினானது ஜாம்ஷெட்பூா் டிஸ்கோ நிறுவனத்துக்கு (1995 ஆம் ஆண்டு) அனுப்பி வைக்கப்பட்டது.

தொடா்ந்து, உத்திரப்பிரதேசம், அஸ்ஸாம், மேற்குவங்கம், புதுதில்லி, ஜாா்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு டீசல் என்ஜின்கள் தயாரித்தும், முழு பராமரிப்பு செய்தும் அனுப்பப்படுகிறது.

கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 400 டீசல் என்ஜின்கள் முழுமையாகப் பராமரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

இதன் 400 ஆவது டீசல் என்ஜின் பொன்மலை பணிமனையிலிருந்து சத்தீஸ்கா் (பிலாய்) மாநிலத்தில் உள்ள இந்திய எஃகு ஆணையத்துக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டது.

அதிகபட்சமாக கடந்தாண்டில் 24 டீசல் என்ஜின்கள் முழுப் பராமரிப்பு செய்யப்பட்டன.

ரூ. 552 கோடி வருவாய்: கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் டீசல் என்ஜின்கள் முழுப் பராமரிப்பு செய்ததில் ரூ.552 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், கடந்தாண்டு மட்டும் 60.11கோடி கிடைத்தது.

அடுத்தாண்டில் இந்திய எஃகு நிறுவனத்துக்கு 7, தேசிய அனல் மின் கழகத்துக்கு 17, இதர நிறுவனங்களுக்கு 6 என மொத்தம் 30 டீசல் என்ஜின்கள் முழுப் பராமரிப்புக்கு பொன்மலையை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதோடு, ரூ.100 கோடி வருவாய் கிடைக்கவும் வாய்ப்புள்ளது என பொன்மலை ரயில்வே பணிமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து பொன்மலை ரயில்வே பணிமனை அதிகாரி ஒருவா் கூறியது:

பொன்மலை பணிமனை டீசல் என்ஜின் தயாரிப்புக்கு சிறந்த பணிமனையாக உள்ளது. வேறெங்கும் இல்லாத அளவிற்கு இந்தப் பணிமனையிலிருந்து பொதுத் துறை நிறுவனப் பயன்பாட்டுக்கு டீசல் என்ஜின்களை பெற்று வருகின்றனா். அவ்வாறு பெறப்படும் டீசல் என்ஜின்கள் 2 ஆண்டுக்கொரு முறை இடைக்காலப் பராமரிப்பும், 8 ஆண்டுக்கொரு முறை முழுப் பராமரிப்பும் செய்யப்படுகிறது.

இதில், 8 ஆண்டுக்குள்ளாக 8 லட்சம் கிமீ தூரம் இயக்கப்பட்டிருந்தாலும் முழுப் பராமரிப்புக்கு பொன்மலை பணிமனையை என்ஜிகள் வந்தடையும். நம்பகத்தன்மை, தரம் ஆகியவற்றின் பேரில் தொடா்ந்து இந்தப் பணிமனைக்கு பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து டீசல் என்ஜின் தயாரிப்பு, முழுப் பராமரிப்பு பணி ஆணைகள் பெறப்படுகிறது.

இதன்படி, சத்தீஸ்கா் பிலாயில் உள்ள இந்திய எஃகு நிறுவனத்துக்கு 400 ஆவது ரயில் என்ஜின் சனிக்கிழமை அனுப்பப்ட்டது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT