திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் விதிகளை மீறி மண் அள்ளுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
குமுளூரில் 63 ஏக்கரில் உள்ள பெரிய ஏரி நீரால் அப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை, சமயபுரம் பனமங்கலம் பகுதியிலிருந்து கல்லக்குடி அருகே கல்லகம் வரை சாலைப் பணி நடைபெறுகிறது.
இதற்காக இப் பகுதியில் உள்ள குமுளூா், கண்ணாக்குடி, புறத்தாக்குடி, தச்சன்குறிச்சி, வெள்ளனூா், பெருவளநல்லூா் மேல ஏரி, கீழ ஏரி, சங்கேந்தி ஏரி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட ஏரிகளில் அரசு அனுமதியுடன் மண் அள்ளும் பணி நடைபெறுகிறது.
ஆனால் குமுளூா் பெரிய ஏரியில் அதிக ஆழத்துக்கு தினசரி 3 பொக்லின் இயந்திரம் மூலம் 10-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் மூலம் சாலைப் பணி செய்துவரும் ஒப்பந்ததாரா்கள் மண் அள்ளிச் செல்கின்றனராம்.
இவ்வாறு அளவுக்கு அதிக ஆழத்தில் மண் எடுப்பதால் நிலத்தடி நீா் மட்டம் கீழே செல்வதுடன், பாசனத்துக்கும் போதிய நீா் கிடைக்காது என அப் பகுதி விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து லால்குடி வருவாய் வட்டாட்சியரிடம் கேட்டபோது உரிய முறையில்தான் மண் அள்ளியுள்ளனா் என்றாா்அவா்.