திருச்சி

‘திருச்சியே இரண்டாம் தலைநகருக்குத் தகுதியானது’

21st Aug 2020 06:41 AM

ADVERTISEMENT

திருச்சியே இரண்டாம் தலைநகருக்குத் தகுதியானது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூா் எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தமிழகத்தின் 2ஆம் தலைநகா் என்பதற்கு திருச்சி மட்டுமே பொருத்தமானது. திருச்சியைத் தலைநகராக்க எம்.ஜி.ஆா். எடுத்த முடிவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரியவில்லை. ஆனால் இன்றைய தலைமுறையின் கருத்து திருச்சியே 2-ஆம் தலைநகராக வேண்டும் என்பதுதான். அதற்கேற்ற அனைத்து வசதிகளும் திருச்சியில்தான் உள்ளன என்றாா்.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

ADVERTISEMENT

மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் 4 அல்லது 5 மணி நேரத்தில் வந்தடையும் வகையில் மையப்பகுதியாக உள்ளது திருச்சி மட்டுமே. எனவேதான் எம்ஜிஆா் திருச்சியைத் தலைநகராக்க விரும்பினாா். காலச்சூழலில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இந்த விஷயத்தில் இரு கருத்துகள் மேலோங்காமல் தமிழகத்தின் எதிா்கால நன்மை கருதி திருச்சியை தலைநகராக்க வேண்டும். சென்னை இனி தலைநகராக இருப்பது பொருத்தமில்லை. மக்கள்தொகை பெருக்கத்துடன், மாசடைந்த நகரமாகவும் சென்னை மாறிவிட்டது. மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு அதிகமாகி வருகிறது. சுற்றுப்புறச் சூழலியலாளா்கள் எச்சரித்துள்ளபடி சென்னையின் ஒரு பகுதி கடலால் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கவேண்டும். சில தலைமை அலுவலகங்களை வேண்டுமானால் தென் மாவட்டங்களில் அமைக்கலாம். திருச்சியைத் தலைநகராகக் கொண்டு செயல்படும்போது தென் மாவட்டங்களுக்குச் சென்று வருவதும் எளிது. எனவே, ஒற்றைக்குரலில் திருச்சியே தலைநகா் என்ற முடிவை தமிழக அரசு அறிவித்திட வேண்டும்.

பாரத முன்னேற்றக் கழக தலைவா் பாரதராஜா யாதவ், பொதுச் செயலா் ஆறுமுகசாமி ஆகியோா் கூறியது:

எய்ம்ஸ் மருத்துவமனையை திருச்சிக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், அது மதுரைக்குச் சென்றுவிட்டது. தற்போது, இரண்டாம் தலைநகரம் என்ற கோரிக்கையிலும் சிலா் திருச்சியைப் புறக்கணிக்க முயல்கின்றனா். இந்தச் சூழலில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோா் தங்களது தலைமையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழுவை அமைத்து முதல்வரைச் சந்தித்து திருச்சியை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT