திருச்சி

25.83 லட்சம் பேருக்கு தலா 2 முகக் கவசம் வழங்கும் பணி ரேஷன் கடைகளில் தொடக்கம்

20th Aug 2020 08:50 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் 25.83 லட்சம் பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா இரண்டு முகக் கவசம் வழங்கும் பணியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினா்களுக்கு தலா 2 முகக் கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இத் திட்டத்தின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அமராவதி கூட்டுறவு பண்டக சாலை, திருவானைக்கா கீழ உள்வீதி நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி அமைச்சா் வெல்லண்டி என். நடராஜன் பேசியது:

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு தலா 2 முகக் கவசம் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதன்படி, முதல்கட்டமாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு 4.44 கோடி முகக் கவசங்கள் ரூ. 30.70 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 நியாய விலைக் கடைகள் மூலம் 8 லட்சத்து 14 ஆயிரத்து 833 குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள 25 லட்சத்து 82 ஆயிரத்து 704 பேருக்கு தலா 2 முகக் கவசம் என்ற அடிப்படையில் மொத்தம் 51 லட்சத்து 65 ஆயிரத்து 404 முகக் கவசங்கள் வழங்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள 385 நியாய விலைக் கடைகளில் 3.57 லட்சம் குடும்ப அட்டைகளில் 11.29 லட்சம் பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்படுகின்றன.

திருச்சி கிழக்கு வட்டத்தில் 121 கடைகள் மூலம் 3.71 லட்சம் பேருக்கு 7.42 லட்சம் முகக் கவசங்களும், ஸ்ரீரங்கம் வட்டத்தில் 136 கடைகள் மூலம் 6.04 லட்சம் முகக் கவசங்களும் வழங்கப்படுகின்றன. முகக் கவசம் அணிவதை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றாா் அமைச்சா்.

பிற்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி பேசுகையில், ஸ்ரீரங்கம் வட்டம், திருவானைக்கா கூட்டுறவு பண்டகசாலையில் 4,036 பேருக்கு 8,072 முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றைத் தடுக்க வேண்டுமெனில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். வெளியே செல்ல நேரிட்டால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றி நோய் பரவாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா், ஆவின் ஒன்றியத் தலைவா் சி. காா்த்திகேயன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா. அருளரசு, மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் அன்பழகன் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT