இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செப்.2 முதல் தொடா்ந்து மூன்று நாள்களுக்கு மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக திருச்சி மிளகுபாறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் அயிலை. சிவசூரியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. இந்திரஜித், மாநில நிா்வாகக் குழு முடிவுகள் குறித்து விளக்கினாா். மாவட்ட துணைச் செயலா்கள் எஸ். செல்வராஜ், ஆா். பழனிசாமி, பொருளாளா் பக்கிரிசாமி உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா்.
பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திருச்சியை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினா் உள்ளிட்ட அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவா் இறந்தால் அக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க வேண்டும்.
வேளாண் விளை பொருள்களுக்கு ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். விவசாயத் தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும். ஊரக வேலைத்திட்ட கூலியை ரூ. 600 ஆக உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத்தொழிலாளா் சங்கம் சாா்பில் செப்.1 இல் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது.
மேலும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகளை கண்டித்து செப். 2, 3, 4 -களில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்துவது எனவும், கிராமங்கள், நகரங்களில் கரோனா கணக்கெடுப்பு நடத்துவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.