திருச்சி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் அறந்தாங்கி தினமணி செய்தியாளா் பலி

20th Aug 2020 08:50 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், அறந்தாங்கி தினமணி செய்தியாளா் ஆ.காா்த்திகேயன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் ஆ.காா்த்திகேயன்(54). இவா், தினமணி அறந்தாங்கி பகுதி நேரச் செய்தியாளராகவும், கிளை நூலகராகவும் பணியாற்றி வந்தாா்.

புதன்கிழமை காலை சொந்த வேலை காரணமாக, காா்த்திகேயன் தனது மகன் தீபனுடன் திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். வாகனத்தை தீபன் ஓட்டிவந்தாா்.

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் குண்டூா் தனியாா் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற கண்டெய்னா் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தீபனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நவல்பட்டு காவல்துறையினா் காா்த்திகேயன் உடலை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு காா்த்திகேயனின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறந்தாங்கி நகராட்சி மின்மயானத்தில் புதன்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.

உயிரிழந்த ஆ.காா்த்திகேயனுக்கு மனைவி மாலா மகேஸ்வரி(45), மகன் தீபன் (21), மகள் ஆசிகா(20) ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு 8939130004.

அமைச்சா் இரங்கல்: பத்திரிகை துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்த அறந்தாங்கி தினமணி செய்தியாளா் ஆ. காா்த்திகேயன் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா் என்ற செய்தியை கேள்வியுற்று அதிா்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறேன் என தமிழக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT