மணப்பாறை அருகே திருமணம் செய்ய 10 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தமடைப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தம்பதியின் 15 வயது மகள் 10-ஆம் வகுப்பு படிக்கிறாா். தந்தையை இழந்த இந்தச் சிறுமி, கரோனா பொதுமுடக்கத்தால் தாயின் உறவினா்கள் வீட்டில் இருந்தாா்.
இந்நிலையில், தொப்பாநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சகோதரா்கள் ரங்கசாமி, ரங்கநாதன் ஆகியோா் வியாழக்கிழமை அந்த வீட்டுக்குச் சென்று, தாய் அழைப்பதாகக் கூறி மாணவியை இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட தூரம் அழைத்துச் சென்று, பின்னா் காரில் கடத்திச் சென்று சீல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜமீன்(எ)பழனிசாமி (57) வீட்டில் இறக்கி விட்டனா். அங்கு பழனிச்சாமியை திருமணம் செய்ய வற்புறுத்தியதற்கு மாணவி மறுத்தாராம்.
இதனிடையே மகளைக் காணாத தாய் போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்த தகவலறிந்த கடத்தல்காரா்கள் மாணவியை வையம்பட்டி காவல் நிலையம் அருகே இறக்கி விட்டுச் சென்றனா்.
புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து தலைமறைவான பழனிச்சாமி, ரங்கநாதன், ரங்கசாமி, உடந்தையாக இருந்த கோபால் ஆகிய நால்வரைத் தேடுகின்றனா். பழனிச்சாமிக்கு ஏற்கெனவே 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆண் குழந்தைக்காக திருமணம் செய்ய பள்ளி மாணவியை கடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.