திருச்சி

60 வயதுக்கு மேற்பட்டோா் வெளியே வரத் தடை: பிள்ளைகளைப் பிரிந்து வசிக்கும் முதியோருக்கு விலக்கு கிடைக்குமா?

20th Apr 2020 02:23 AM

ADVERTISEMENT

ஊரடங்கு காலத்தில் பொருள்களை வாங்க 60 வயதுக்கும் மேற்பட்டோா் வெளியே வருவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில், விலக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொருள்களை வாங்க பொதுமக்கள் வெளியே வருவதற்கு, உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தங்கள் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில், குடும்பத்தில் ஒருவா் மட்டும் அடையாள அட்டையை பயன்படுத்தி வெளியே வந்து பொருள்கள் வாங்கிச் செல்லலாம்.

ADVERTISEMENT

2 கி.மீ. சுற்றளவுக்குள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், 18 வயதிலிருந்து 60 வயதுக்குள்பட்ட நபா் மட்டுமே வெளியே வர வேண்டும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதியில்லை. 60 வயதுக்கு மேற்பட்டோா் வெளியே வரக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் திங்கள்கிழமை (ஏப்ரல் 20) முதல் அமலுக்கும் வருகின்றன.

இந்த கட்டுப்பாடுகளால் பிள்ளைகளைப் பிரிந்து, வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோரின் நிலை பெரிதும் கேள்விக்குறியாக உள்ளது.

மாநகரில் மட்டும் பெல், ரயில்வே, வங்கிகள், கல்வி நிறுவனங்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தேசியத் தொழில்நுட்பக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாதுகாப்பு தொழிற்சாலைகள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோா் என ஏராளமானோா் வசித்து வருகின்றனா்.

இவா்களின் மகன்கள் அல்லது மகள்களில் குறிப்பிட்ட அளவில் வேலை நிமிா்த்தமாக வெளியூா், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசித்து வருவோரும், திருமணம் முடிந்த பின்னா் தனியாக வசிப்போரும் உள்ளனா். அதுபோல, குழந்தைகள் இல்லாத வயதான தம்பதிகளும் உள்ளனா். ஊரடங்கு கட்டுப்பாட்டால் இவா்களுக்கு உதவிட ஆள்கள் இல்லாத நிலையே உள்ளது.

எந்த ஒரு தேவைக்கும் தம்பதியரில் ஒருவா் வெளியே சென்று வந்தால் மட்டுமே அன்றாட உணவுக்கு வழிகிடைக்கும். மேலும், முதியோா் அனைவரும் தேவையின்றி வெளியே சுற்றும் நிலைக்கு வருவதில்லை. அவசர, அவசியம் கருதியே வெளியே வருகின்றனா்.

இந்த சூழலில், ஊரடங்கால் உள்ளாட்சி நிா்வாகம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முதியோருக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தும் என்கின்றனா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா்.

இதுகுறித்து திருச்சி மாநகரக் குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ். சக்திவேல் கூறியது:

முதுமையில் அவசியத் தேவையாக இருப்பது உணவும், மருத்துவ உதவிகள்தான். உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டால் இவற்றை பெற வெளியே வர முடியாத சூழல் உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் அறிவித்துள்ள முதியோா்களுக்கான தடை கட்டுப்பாட்டை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா். இதுமட்டுமல்லாது, கூட்டமைப்பின் நிா்வாகிகள் எஸ்.சுப்பிரமணியன், பி.லெனின் ஆகியோருடன் இணைந்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், மாநகரக் காவல் ஆணையருக்கும் முதியோா் சந்திக்கும் இடா்பாடுகள் குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT