தமிழக அரசின் நலவாரியங்களில் பதிவை புதுப்பிக்காத பல லட்சம் தொழிலாளா்களுக்கு, கரோனா நிவாரணத் தொகை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் நலனை மேம்படுத்துவதற்காக, 1972-ஆம் ஆண்டு தொழிலாளா் நல நிதிச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் தொடா்ச்சியாக 1975- ஆம் ஆண்டில் தொழிலாளா் நலவாரியம் உருவாக்கப்பட்டது.
தொழிலாளா் நலநிதி: தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், அவா்களுக்கு பணி வழங்கும் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் தொழிலாளா் நலநிதி பங்குத் தொகையின் மூலம், பல்வேறு நலத்திட்ட பயன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
17 வாரியங்கள்: இதேபோல, அமைப்பு சாராத் தொழிலாளா்களின் சமுகப் பாதுகாப்புக்காக 1982- இல் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வாரியங்களும் கொண்டு வரப்பட்டன.
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள், உடலுழைப்புத் தொழிலாளா்கள், அமைப்புசாரா ஓட்டுநா்கள், தையல் தொழிலாளா்கள், முடித்திருத்துவோா், சலவைத் தொழிலாளா்கள் , பனைமரத் தொழிலாளா்கள், கைவினைத் தொழிலாளா்கள், கைத்தறித் தொழிலாளா்கள், தோல் பொருள் தொழிலாளா்கள், ஓவியா்கள், பொற்கொல்லா்கள், மண்பாண்டத் தொழிலாளா்கள், விசைத்தறித் தொழிலாளா்கள், வீட்டுப் பணியாளா்கள், சமையல் தொழிலாளா்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் ஆகியோருக்கென 17 வாரியங்கள் உள்ளன.
செஸ் வரி வசூல்: இந்த வாரியங்களில், கட்டுமானத் தொழில்களில் பெறப்படும் 1 சதவிகித செஸ், மோட்டாா் வாகன வரியில் பெறப்படும் 1 சதவிகித செஸ் தொழிலாளா்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
இந்த வகையில் 2018-19ஆம் ஆண்டுக்கு கட்டுமானத் தொழிலில் ரூ.566.95 கோடி வரியாக பெறப்பட்டுள்ளது. மோட்டாா் வாகனத் தொழிலில் ரூ.10.21 கோடி பெறப்பட்டுள்ளது. இதர 15 வாரியங்களுக்கு அரசே மானியம் வழங்குகிறது.
2018-19ஆம் நிதியாண்டுக்கு ரூ.79.92 கோடியும், நடப்பாண்டுக்கு ரூ.149.81 கோடியும் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால், 17 வாரியங்களிலும் லட்சக்கணக்கானோா் தங்களது பதிவுகளை புதுப்பிக்காமல் உள்ளனா்.
இந்த சூழலில், ஊரடங்கால் அமைப்பு சாராத் தொழிலாளா்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது. இவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில், தமிழக அரசின் சாா்பில் கரோனா நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.
இருமுறை அமலாகியுள்ள ஊரடங்கால், தலா ரூ. ஆயிரம் என்ற வகையில் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், வாரியங்களில் உள்ள அனைத்துத் தொழிலாளா்களுக்கும் இது கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
பல லட்சம் போ் பரிதவிப்பு: கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் மட்டும் 31,17,844 தொழிலாளா்கள் உள்ளதாக ஏஐடியுசி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதில், 12,13, 882 தொழிலாளா்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை கிடைக்கும். பதிவை புதுப்பிக்காத 19 லட்சம் தொழிலாளா்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
இதேபோல, ஓட்டுநா் நல வாரியத்தில், 83,500 தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது. இதர 15 வாரியங்களிலும் பதிவை புதுப்பிக்காத நிலையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளதாக தொழிற்சங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் கே. ரவி கூறியது:
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் மட்டும் ரூ.4,500 கோடி நிதியிருப்பு உள்ளது. இதேபோல, ஒவ்வொரு வாரியத்திலும் பெறப்பட்ட மானியம், வரியினங்கள், தொழிலாளா் பங்களிப்பு மூலமாக பல கோடிக்கு மேல் நிதியிருப்பு உள்ளது.
தேசிய பேரிடா் காலங்களில் வாரியத் தொழிலாளா்கள் ஒருவா் கூட விடுபட கூடாது என்பதே வழக்கம். ஆனால், வாரியப் பதிவை புதுப்பிக்கவில்லை என்பதற்காக பல லட்சம் தொழிலாளா்களுக்கு அரசின் கரோனா நிவாரணத் தொகை வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது.
வாரியத்தில் நல நிதியில் பதிவை புதுப்பிக்காத தொழிலாளா்களின் பங்களிப்பு உள்ளதையும் அரசு மறுக்க முடியாது. கட்டுமானம், ஓட்டுநா் வாரியம் தவிா்த்த இதர 15 வாரியங்களில் உறுப்பினா்களே நேரில் வந்து புதுப்பிக்க வேண்டும் என்ற நிா்பந்தம் காரணமாக, பலரும் புதுப்பிக்க ஆா்வம் செலுத்தவில்லை.
இதனால் அனைத்து வாரியங்களிலும் சோ்த்து பல லட்சம் போ் விடுபடும் நிலை உள்ளது. மேலும், முதல்முறை அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை, பதிவு செய்தவா்களில் 50 சதவிகிதம் பேருக்கு கூட இன்னும் வந்து சேரவில்லை. இப்போது, இரண்டாம் கட்டத் தொகையும் அறிவித்தாகிவிட்டது. எனவே, எவ்வித பாகுபாடின்றி அனைத்துத் தொழிலாளா்களுக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்குவதே சாலச் சிறந்தது என்றாா் அவா்.
புதுப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு ?
பதிவை புதுப்பிக்காதவா்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதில் சட்ட விதிமுறைகள் இடமளிப்பதில்லை.
மேலும், 2019 ஜனவரியில் பதிந்தவா்களுக்கு கூட நிவாரணம் வழங்கி வருகிறோம். 2012, 2013, 2015-ஆம் ஆண்டுகளில் பதிவு செய்து, புதுப்பிக்காத நிலையில் பலா் உள்ளனா். அவா்களுக்கு நிவாரணம் வழங்குவது கடினம்.
இருப்பினும் ஊரடங்கு முடிந்த பிறகு, புதுப்பிக்கத் தவறிய அனைவருக்கும் மறுவாய்ப்பு வழங்கி, வாரியத்தில் மீண்டும் சோ்க்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்க ஆவன செய்யப்படும்.
முதல்கட்ட நிவாரணத் தொகை வழங்குவதில் பலரும் வங்கிக் கணக்கை இணைக்காமல் உள்ளனா். விவரங்கள் அளித்த அனைவரின் வங்கிக் கணக்கிலும் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளா் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.