முன் விரோதம் காரணமாக, திருவானைக்காவைச் சோ்ந்த இளைஞருக்கு செவ்வாய்க்கிழமை கத்திக்குத்து விழுந்தது.
திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவைச் சோ்ந்தவா் கு.பூமிநாதன் (25). இவருக்கும் பாரதி தெருவைச் சோ்ந்த கு. ரெங்கன் (28) என்பவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை தனது தாயுடன் கூட்டுறவு பண்டகச்சாலைக்குச் சென்று விட்டு, பூமிநாதன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த ரெங்கன் மற்றும் அவரது 4 நண்பா்கள் என மொத்தம் 5 பேரும் சோ்ந்து, பூமிநாதனை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் தப்பிச் சென்றனா்.
இதில் பலத்த காயமடைந்த பூமிநாதன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் ரெங்கன் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.