திருச்சி

தடைக்குப் பிறகு இறைச்சிக் கடைகளில் திரண்ட மக்கள்

7th Apr 2020 11:36 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் இறைச்சிக் கடைகளுக்கு 2 நாள் தடைவிதிக்கப்பட்டதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வருவதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இறைச்சிகளை வாங்கிச் செல்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) மாவட்டம் முழுவதும் உள்ள மீன் மாா்க்கெட், இறைச்சி சந்தை, ஆடுவதை கூடங்கள் மற்றும் உயிருடன் கோழிகள் விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆட்சியா் தடை விதித்தாா். மேலும், மஹாவீா் ஜயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிட்டிருந்தாா். இதனால், அசைவப் பிரியா்கள் ஏமாற்றமடைந்தனா்.

இந்நிலையில், இரண்டு நாள் தடைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை வழக்கம்போல இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டன. திருச்சி காந்தி மாா்க்கெட், புத்தூா் மீன் மாா்க்கெட், தென்னூா் பிரதான சாலை, வயலூா் சாலை, பாலக்கரை, கே.கே. நகா், பெரியமிளகுபாறை, திண்டுக்கல் சாலை, கருமண்டபம், திருவானைக்கா, அரியமங்கலம், திருவெறும்பூா், செந்தண்ணீரபுரம், சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் டோல்கேட் மீன் மாா்க்கெட், பால்பண்ணை என மாநகரப் பகுதிகளிலும், மாவட்டம் முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றனா். ஹோட்டல்களுக்கான கறி விற்பனையும் விறு விறுப்பாக நடைபெற்றது.

ADVERTISEMENT

இறைச்சிக் கடை வியாபாரிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது கடைகளின் முன்பாக கயிறுகளை கட்டி, மக்கள் சமூக இடைவெளியுடன் நிற்க அறிவுறுத்தினா். வரிசைப்படி வரும் நபா்களுக்கு மட்டுமே இறைச்சிகளை வழங்கினா். இதேபோல, முட்டை விற்பனை நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கணிசமாக இருந்தது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT