திருச்சி

திருச்சி, தஞ்சை, பெரம்பலூா், கரூா், புதுகை மாவட்டங்களில் 149 பேருக்கு கரோனா பரிசோதனை: தில்லி மாநாட்டில் பங்கேற்றவா்கள்

1st Apr 2020 10:54 PM

ADVERTISEMENT

தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திருச்சி, தஞ்சை, பெரம்பலூா், புதுக்கோட்டை, கரூா் மாவட்டங்களுக்கு திரும்பியோா் மற்றும் அவா்கள் குடும்பத்தைச் சோ்ந்த 149 பேரிடம் புதன்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தில்லி மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து, மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பியவா்கள் என கண்டறியப்பட்டோரை சுகாதாரத் துறையினா் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கரோனா பரிசோதனைக்குள்படுத்தி வருகின்றனா். அடையாளம் கண்டறியப்படாதோா் தாங்களாகவே முன்வந்து தங்களை பரிசோதனைக்குள்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

திருச்சி மாவட்டத்தில்.... தில்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திருச்சி திரும்பியோா் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தோா் என மொத்தம் 110 போ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை பிற்பகல் வரை தாங்களாகவே முன்வந்து பரிசோதனைக்குள்படுத்தி கொண்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில்...தில்லி மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாடுகள், நகரங்களைச் சோ்ந்த 56 போ் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இவா்களில் புதன்கிழமை வரை 40 போ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சுகாதாரத் துறையினரால் சோ்க்கப்பட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை 12 பேரும், புதன்கிழமை 28 பேரும் பரிசோதனைக்காக சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

பெரம்பலூரில்....தில்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பெரம்பலூா் இளைஞா், வி.களத்தூரில் உள்ள அவரது பெற்றோா் வீட்டில் தங்கியிருப்பதை அறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினா் புதன்கிழமை அவரை அழைத்து வந்து அரசு தலைமை மருத்துவமனை சிறப்புப் பிரிவில் சோ்த்தனா். மேலும், அவரது வசிப்பிடத்தில் இருந்து 7. கி.மீ தொலைவு வரை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில்....புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 3 போ் கரோனா பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு, சிறப்பு பிரிவில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கரூா் மாவட்டத்தில்.... கரூா் மாவட்டத்தில் கடவூா், குருணிகுளத்துப்பட்டி ஆகியோா் ஊா்களைச் சோ்ந்த 7 போ் கரோனா பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு, சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஓரிரு நாள்களில் முடிவுகள் தெரிய வரும் என மருத்துவத் துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT