திருச்சி

அக். 29-இல் முழு கடையடைப்பு போராட்டம்: பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் அறிவிப்பு

22nd Sep 2019 03:28 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் நிறைவேற்றப்படும் மத்திய அரசு திட்டங்கள் சிலவற்றை எதிர்த்து, அக்டோபர் 29 ஆம் தேதி முழுகடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக, பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் க. கா.இரா. லெனின் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் அண்மைக்காலமாக  ஹைட்ரோ கார்பன்,  நியூட்ரினோ,  எட்டு வழிச்சாலை திட்டம், விவசாய நிலங்களில் கெயில் குழாய்கள் பதிப்பது, ஹிந்தி திணிப்பு  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் சில்லறை  வர்த்தகம்,  விவசாயம் உள்ளிட்டவை  முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, தமிழகத்தை இந்தப் பேரழிவிலிருந்து மீட்கும் வகையில் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் உருவாக்கப்பட்டு, பல்வேறு 
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே, நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து தற்போது இருகட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். அன்று மாலை 4 மணிக்கு பேரழிவுத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் பகுதிகளில் அவற்றை தடுத்து நிறுத்துவது குறித்து உறுதிமொழி ஏற்கும் கூட்டங்கள் நடத்தப்படும்.
மேலும், தமிழகத்தில் பேரழிவுத் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி  அக்டோபர் 29-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழுகடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 
மற்ற அமைப்புகள், வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துதரப்பு மக்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் அவர். 
அப்போது,  பேரழிவுக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் கா. அய்யநாதன்,  திமுக மாநகரச் செயலர் அன்பழகன்,  வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் ரவி முத்துராஜா, சண்முகநாதன், விவசாய சங்க நிர்வாகி தங்க. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக காலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை திமுக மாவட்டச் செயலர் கே.என். நேரு தொடக்கி வைத்துப் பேசினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT