திருச்சி

புத்தேரியை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

22nd Sep 2019 03:31 AM

ADVERTISEMENT


திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகேயுள்ள கோமாகுடி ஊராட்சிக்கு சொந்தமான  புத்தேரியை குடிமராமத்து பணி மூலம்  தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
 திருச்சி முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றிலிருந்து பெருவளை வாய்க்கால் உற்பத்தி ஆகிய வாத்தலை, மண்ணச்சநல்லூர், சமயபுரம், பெருவளநல்லூர்,  இ. வெள்ளனூர் குமுளி வழியாக கோமாகுடி புத்தேரிக்கு நீர் வரத்து வருகிறது.  இந்த நீர் செம்பரை, கோமாகுடி, சிறுமயங்குடி, இடங்கிமங்கலம், முள்ளால் உள்ளிட்ட பகுதியின் நீர்ஆதாரமாக ஏரி விளங்குகிறது.  கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக அரசின் வருவாய்துறை அமைச்சராக இருந்த  அன்பில் தர்மலிங்கம்  முயற்சியால் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் இந்த புத்தேரி தூர்வாரப்பட்டது. அதன் பிறகு பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் தூர்வாரப்படவில்லை.
இதனால்  ஏரி முழுவதும் முள்கள் புதர்மண்டிக்கிடக்கிறது. ஏரியின் கொள்ளளவும் குறைந்துள்ளதால், ஏரிக்கு வரும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் வீணாக தண்ணீர் வெளியேறுகிறது. 
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் குடிமராமத்து பணியின் கீழ்  தூர்வாரும் பணிகள் நடைபெறுவதால், 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள புத்தேரியையும் தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இந்த ஏரி எங்களது பொதுப்பணித்துறைக்கு சொந்தமானவை அல்ல. இதனால் நாங்கள் தூர்வாரும் பணியை செய்ய முடியாது.  லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தான் செய்ய வேண்டும் என்றனர்.
லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்ட போது, இந்த  ஏரி தூர்வார ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளோம். டிஆர்டிஏ அனுமதி கிடைத்தவுடன் பணி விரைவில் நடைபெறும் என்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT