திருச்சி

தமிழகத்துக்கான எல்லைப் போராட்டங்களை நடத்தியவர் ம.பொ.சி

22nd Sep 2019 03:32 AM

ADVERTISEMENT


தமிழகத்துக்கான எல்லைப் போராட்டங்களை நட த்தியவர் ம.பொ.சிவஞானம் என்றார் முனைவர் பிரேமா நந்தகுமார். 
திருச்சி இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிலம்புச் செல்வர்(ம.பொ.சிவஞானம்) நேரிசை மாலை எனும் நூலை வெளியீட்டு அவர் மேலும் பேசியது: 
தமிழுக்கும், தேசியத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர் ம.பொ. சிவஞானம். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது தமிழகத்திற்கான வடக்கு, தெற்கு எல்லைக்கு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியவர். அதுமட்டுமின்றி இலக்கியச் சான்றுகளை காட்டி பல்வேறு பகுதிகளை தமிழகத்தில் இணைப்பதற்கு காரணமாக இருந்துள்ளார்.
இலக்கியவாதியாக மட்டுமில்லாமல் ஆன்மிகவாதியாகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தன்னலம் கருதாமல் பொது நலத்துக்காக வாழ்ந்தவர்தான் ம.பொ.சிவஞானம். எந்த பதவியையும் விரும்பி தேடிச் செல்லாதவர்.  கிராமப்புறங்களிலும் சிலப்பதிகாரத்தை கொண்டு செல்ல அரும்பாடுபட்டவர் என்றார் அவர். 
முன்னதாக, இந்நூலை எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் வெளியிட முதல்படியை இரா. மு.கதிரேசன், எம்.ஆர்.எஸ்.கேசவன், இ.சேவியர், ச.சண்முகநாதன், புலவர் ப.ராமதாசு, கவிஞர்கள் க.மாரிமுத்து, க.செல்வராசன், முனைவர் ப. சுப்பிரமணியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 
தொடர்ந்து கவிஞர் தாமரைச் செல்வன் வாழ்த்து கவியும், தமிழரசு கழக பொறுப்பாளர் தங்க.கலியமூர்த்தி பாராட்டுரையும் வழங்கினர். நூலாசிரியர் முனைவர். ப.வேங்கடேசன் ஏற்புரையாற்றினார். 
முன்னதாக நா.நடராசன் தமிழ் வணக்கம் பாட,  இராச . இளங்கோவன் வரவேற்புரையாற்றினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT