திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சங்கிப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், பூக்கடைகாரர். தற்போது மணப்பாறையில் வசிக்கிறார். இவரது மகன் சிவசாமி, கோவில்பட்டி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர். இவரது சக மாணவர் அண்ணாவிநகர் வேல்முருகன் மகன் சஞ்சய். நண்பர்களான இருவரும் சரியாக படிப்பதில்லை என பெற்றோர் வீட்டில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாலை வீடு திரும்பவில்லை. சக மாணவர்களை விசாரித்தபோது இருவரையும் பழனி செல்லும் பேருந்தில் பார்த்ததாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை பழனிக்கு சென்று விட்டு திண்டுக்கல் வந்த மாணவர்களை திண்டுக்கல் போலீஸார் மீட்டு, மணப்பாறை போலீஸார் உதவியுடன் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.