காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை சேமிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை சேமிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புதன்கிழமை தெரிவித்தார்.
திருச்சி தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற தமாகா களப்பணியாற்றி வருகிறது. இதற்காக, மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு இடங்கள் ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும். ஒருபோதும் தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முடியாது. அதற்கு தமிழக அரசும் இடம் அளிக்காது. 
பேனர் கலாசாரத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைப்பது வரவேற்கத்தக்கது. திருவெறும்பூர் கிளிக்கூடு பகுதியில் பயிரிடப்பட்டு அழுகும் சூழலில் உள்ள வாழைப்பயிர்களுக்கு அரசு விரைந்து இழப்பீடு வழங்கவேண்டும். மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.இதில், முக்கொம்பு,கொள்ளிடம் வழியாக 30ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலில் வீணாக கலந்து வருகிறது. 
இதனை நிரந்தரமாக தடுப்பதற்கு, மாயனூர் வழியாக காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். மேலும்,100 இடங்களில் தடுப்பணைகள் கட்டவேண்டும். அதேபோல், கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்றார்.
தொடர்ந்து, நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தமாகா மூத்தத் தலைவர் ஞானதேசிகன், திருச்சி மாவட்டத் தலைவர்கள் நந்தா கே.செந்தில்வேல், டி.குணா, கே.வி.ஜி.ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com