கலாம் கனவை நினைவாக்க களம் இறங்கும் மக்கள் குழு: கோவை, திருச்சி,சென்னையில் சிறப்புக் கூட்டம்

மறைந்த  குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் கனவான இந்தியா 2020 திட்டத்துக்கு வலு சேர்க்கும்

மறைந்த  குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் கனவான இந்தியா 2020 திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், மக்கள் சக்தியைத் திரட்ட ஓராண்டுக்கு விழிப்புணர்வு இயக்கத்தை நல்லோர் வட்டம் அமைப்பு மேற்கொள்கிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை, திருச்சி, சென்னையில் 5 ஆயிரம் சமூக செயற்பாட்டாளர்கள் சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து நல்லோர் வட்டம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், திருச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சசிக்குமார், கிள்ளிவளவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
 அப்துல் கலாமின் கனவுத் திட்டமான இந்தியா விஷன்- 2020 என்பதில் மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்த தவறிவிட்டது.  இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்ய பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிராமப்புற இளைஞர்கள், சமூக அமைப்புகள், சமூகப் பிரமுகர்கள் ஆகியோரை ஒன்று கூட்டி கிராமங்கள், நகரங்கள்தோறும் சென்று மக்கள் சக்தியைத் திரட்டவுள்ளோம். 
இதற்காக நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களிடம் என் பொறுப்பு என்ற உறுதிமொழி அட்டையை வழங்கி, அதில் கையொப்பம் பெற்று அந்தந்த பகுதியில் அவரவர் விரும்பும் வகையில் தத்தெடுப்பு திட்டத்தைத் தொடங்கவுள்ளோம்.
பள்ளி, கிராமம், பொது சுகாதார வளாகம் ஆகியவற்றை தத்தெடுத்து ஓராண்டுக்கு அதன் முன்னேற்றத்துக்கு பணிபுரிவர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தை மூன்று மண்டலங்களாகப் பிரித்து சமூக செயற்பாட்டாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் வரும் 29-ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கொங்குமண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
  தொடர்ந்து திருச்சியில் அக்டோபர் 6-ஆம் தேதி பிஷப் ஹீபர் கல்லூரியில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், திருச்சி தொடங்கி கன்னியாகுமரி வரையில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்கவுள்ளனர். விடுபட்ட இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அக்.13-ஆம் தேதி சென்னை தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் கூடி ஆலோசனை நடத்தி உறுதிமொழியேற்கவுள்ளனர். அரசு நிர்வாகம், அரசியல் சக்திகளுக்கு அடுத்தப்படியாக மக்கள் சக்தியால் கலாம் கனவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com