மணப்பாறை அடுத்த மகாளிப்பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து பகுதி நேர அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திங்கள்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத ரூ.43 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த அலுவலகத்தில் உமாமகேஸ்வரி மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர் ராணி ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட லஞ்சம் ஒழிப்பு போலீஸ் குழுவினர், போக்குவரத்து
அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சுமார் 3 மணி நேர ஆய்விற்கு பிறகு, ரூ.43 ஆயிரம் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்தப் பணம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளருக்கு சொந்தமானது என கூறப்பட்ட நிலையில், விசாரணைக்கு பின் நடவடிக்கை இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது மோட்டார் வாகன ஆய்வாளர், தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் உள்ளிட்டோர் அலுவலகத்தில் இருந்ததாகத் தெரிகிறது.