திருச்சி

கடைமடை பகுதிக்கு வராத காவிரி தண்ணீர்: பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை

17th Sep 2019 09:47 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என புகார் கூறி பொதுப்பணித்துறை அலுவலம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் த லைமை வகித்து கூறுகையில்,  டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் கடைமடை பகுதிகளுக்கு வரவில்லை. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்களில் குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் பெரும்பாலான கிளைக் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முறையிட்டால் அதிகளவு தண்ணீர் திறந்தால் கால்வாய் கரைகள் உடைந்துவிடும் என்கின்றனர். கால்வாய்களை புனரமைக்க ஆண்டுதோறும் பல கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், முறையாக பணிகள் நடைபெறுவதில்லை. மேலும், மணல் கொள்ளையால் ஆற்றுப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஆழமாக உள்ளதால் தண்ணீர் உந்தி செல்ல முடியவில்லை என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் விவசாயிகள் மற்றும் திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT