தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய ஊட்டச்சத்து குழுமம், போஷான் அபியான் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செப்.1ஆம் தேதி முதல் செப்.30ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்று. இக் கண்காட்சியை ஆட்சியர் சு. சிவராசு திறந்து வைத்தார்.
கண்காட்சியில், பாரம்பரிய உணவுகள், ஊட்டச்சத்துக்கள் உள்ள காய்கறிகள், பயறு, கீரை வகைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து உணவு பிரமிடு அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்களுக்கு தன் சுத்தம், உணவு பராமரிப்பு, வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
ஆட்சியர் தலைமையிலும், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சிவதாசு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பழனிதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.