திருச்சி

அனிதா தற்கொலை வழக்கு விசாரணை: "விலக்கிக் கொள்ளக் கோரும் பெற்றோரின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது'

13th Sep 2019 09:58 AM

ADVERTISEMENT

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும் என அவரது பெற்றோரின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என்றார்  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல். முருகன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஆதிதிராவிடர் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்  ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்து பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:    
நீட் தேர்வில் வெற்றி பெறாததால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பான விசாரணையை  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர். என்ன காரணத்தால் இந்த விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும் எனக் கோருகின்றனர் எனத் தெரியவில்லை. 
இதுகுறித்து ஆணையம் பரிசீலித்து வருகிறது. 
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளில் பதிவாகும் வழக்குகள் விசாரணை மற்றும் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவில் வழக்குத் தொடர்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
மதுரை மாவட்டம், காயம்பட்டியில் ஒரே குடிநீர்த் தொட்டியில் ஆதிதிராவிட மக்களுக்கு என தனி வால்வு அமைக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
தமிழகத்தில் வேறெங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் முருகன்.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் டி. சாந்தி,  ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மாலதி,  ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா  உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

திருச்சி விடுதியில் ஆய்வு
திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள தாழ்த்தப்பட்டோர் மாணவர்கள் விடுதி, கன்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள தாழ்த்தப்பட்டோர் மாணவியர் விடுதியில்  
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாணவ, மாணவியர், விடுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர் விடுதியில் ரூ. 30 லட்சத்தில் அனைத்து அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட உள்ளது. இதேபோல், மாணவியர் விடுதியில் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு, டைனிங் டேபிள், இணையதள வசதி ஆகியவை குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். 
தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி 15 ஆவது வார்டுப் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் குடிசைப் பகுதிகள் மற்றும் துவாக்குடி என்ஐடியில் உள்ள விடுதி ஆகியவைகளையும் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT