திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ. 47.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

10th Sep 2019 08:05 AM | ஆர்.எஸ். கார்த்திகேயன்

ADVERTISEMENT

வெளிநாடுகளிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ. 47.75 கோடி மதிப்பிலான தங்கம், திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
இந்தியாவைப் பொருத்த வரையில், தங்கத்தின் விலை அண்மைக்காலமாக பல மடங்கு அதிகரித்து வருகின்றது. தினசரி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதால், நகைகளை வாங்கும் பொதுமக்கள் மட்டுமின்றி விற்பனை செய்யும் வணிகர்களும், தங்களது லாபத்தை கருத்தில் கொண்டு குறைவான விலையில் தங்கத்தை கொள்முதல் செய்ய பல்வேறு வழிகளை நாடுகின்றனர். அதில் ஒன்றுதான், வெளிநாடுகளிலிருந்து தங்கம் கொள்முதல் செய்வதாகும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி  செய்யப்படும் தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. மேலும், காப்பீடு, ஜிஎஸ்டி உள்ளிட்டைவை சேரும்போது கொள்முதலுக்கு அதிகளவில் செலவிட வேண்டிய கட்டாயம் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு  லாபம் குறையும் நிலையும் ஏற்பட்டது. 
கடந்த 3  ஆண்டுகளில் மட்டும் சுமார் 47.75 கோடி மதிப்பிலான 160 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டு, திருச்சி விமான நிலையத்தில்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பிடிபடாதவை பல மடங்கு இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ. 11. 87 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள், 2018-இல் ரூ. 16 கோடி மதிப்பிலும், 2019 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரையில் மட்டும் 19.88 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டு அவை சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஜூலை மாதத்தில் மட்டுமே ரூ. 4.98 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.
பிடிபட்டால் பயணிகள் மட்டுமே சிக்குவர் : தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து கொடுத்து அனுப்பும் நபர்கள், இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் காத்திருக்கும் தங்களது சகாக்களுக்கு தங்கள் கடத்தல் தொடர்பான விவரங்களை படம் எடுத்து அனுப்பி விடுவர். ஆனால் அனுப்புவோரின் விவரமோ அல்லது வாங்க வருவோரின் விவரமோ, தங்கத்தைக் கொடுத்து அனுப்பும் நபர்களிடம் வழங்குவதில்லை. அதற்கு காரணம், தங்கம் விமான நிலையத்துக்கு வெளியே வந்தால் மட்டுமே, தொடர்புடைய நபர்கள் தங்கத்தை வாங்க வருவர். சுங்கத்துறையில் சிக்கிக்கொண்டால், தங்கத்தை வாங்க வந்திருக்கும் நபர்கள் நழுவி தப்பிவிடுவர். பயணி மட்டுமே சிக்கிக்கொள்வது வழக்கம்.
கழிவறையில் தங்கத்தை வீசிய பயணியை கடத்திய மர்ம நபர்கள் : அதுபோல அண்மையில் மலேசியாவிலிருந்து தங்கத்தைக் கடத்தி வந்த பயணி ஒருவர், திருச்சி விமான நிலையம் வந்தவுடன், பயத்தில் தங்கத்தை கழிவறையில் போட்டுவிட்டு ஆள் மட்டும் வெளியே வந்தார்.  
காத்திருந்த நபர்கள், தங்கம் குறித்து கேட்டபோது தங்கத்தை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால் சந்தேகப்பட்ட நபர்கள் அவரைக் காரில் கடத்திச் சென்று தனி இடத்தில் வைத்து தாக்கியுள்ளனர். 
அவரிடம் தங்கம் இல்லை என்பதை உறுதி செய்தபின்னரே அவரை விடுவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான நபர் இதுகுறித்து பின்னர் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அரங்கேறியது. 
கூழ் வடிவிலான தங்கம் அதிகளவில் கடத்தல் : அண்மைக்காலமாக கூழ் வடிவில் தங்கத்தை பொட்டலமிட்டு அவற்றை ஆசனவாய் வழியாக வயிற்றுக்குள் வைத்து, கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையில் கடத்தி வரும்போது எளிதில், சுங்கத்துறையினரிடம் கடத்தல் நபர்கள் சிக்குவதில்லை எனக்கூறப்படுகின்றது. மெல்லிதான (காண்டம், பெரிய அளவிலான கேப்சூல் போன்ற  உறைகளுக்குள் கூழ் வடிவில்  தங்கத்தை பொட்டலமிட்டு, வலி தெரியாமல் இருக்க சிறப்பு ஸ்பிரேயைப் பயன்படுத்தி வயிற்றுக்குள் செலுத்தி கடத்தி வருகின்றனர். 
இவ்வாறு வரும்போது, ஸ்கேன் கருவியில் அது தெரிவதில்லை எனக் கூறப்படுகின்றது. ஆனால் அவற்றையும் சுங்கத்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT