திருச்சி

தமிழகத்தில் 3 மாதங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவது அவசியம்: அமைச்சர் வேலுமணி வலியுறுத்தல்

10th Sep 2019 10:40 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை 3 மாத காலத்துக்குள் அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்றார் தமிழக  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

திருச்சி கலையரங்கம் திருமண மண்டப அரங்கில் திங்கள்கிழமை திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய 7 மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடனான மண்டல அளவிலான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த செயல்முறை விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று கருத்தரங்கைத் தொடக்கி வைத்து மேலும் பேசியது: 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம் தற்போது அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேலும் இப்பணிகளை 3 மாதத்திற்குள் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள் வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மழைநீர் சேகரிப்பு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.  

சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியது: 

புதுக்கோட்டை மாவட்ட  மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ரூ.301.50 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மதயானைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நீருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. இந்த நீருந்து நிலையத்தின் மூலம் 192 தரைமட்ட நீர்தேக்கத்தொட்டிகளுக்கு குடிநீர் உந்தி அனுப்பப்பட்டு 1,570 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT