திருச்சி

குடிநீர்க் கேட்டு காலி குடங்களுடன் ஆட்சியரகம் முற்றுகை

10th Sep 2019 10:44 AM

ADVERTISEMENT

குடிநீர்க் கேட்டு காலி குடங்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதன் எதிரொலியாக குறைதீர்கூட்டத்துக்காக நியமிக்கப்படும் பாதுகாப்பு போலீஸாரைவிட கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டிருந்தனர்.  
அப்போது, பழைய ஆட்சியரகம் சாலை வழியாக வந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆட்சியரகத்துக்குள் நுழைய முயன்றனர். அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆட்சியரகத்துக்கு வெளியே சாலையோரம் காலி குடங்களை வைத்துவிட்டு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அந்தப் பெண்கள் அளித்த மனு:
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சேதுராப்பட்டி ஊராட்சியில் உள்ள சூறாவளிப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 5 மாதங்களுக்கு மேலாக குடிநீர்விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், காவிரிக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி அமைத்து விநியோகம் செய்யப்படுவதும் பற்றாக்குறையாகவே உள்ளது. எனவே, புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்துதர வேண்டும். காவிரிக் குடிநீர் விநியோகத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  
மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு: திருவிங்கோய்மலை, தாதம்பட்டி, சிட்டிலரை, தும்பலம், காட்டூர், கொளக்குடி, அப்பணநல்லூர், முசிறி, கோடியாம்பாளையம், மணமேடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் 300 மாட்டு வண்டிகள் உள்ளன. ஆற்றில் மண் அள்ளும் தொழிலை நம்பி 300 குடும்பங்கள் உள்ளன. ஆனால், அரசு குவாரிகள் அமைக்கப்படாததாலும், மணல் அள்ளுவதற்கு உரிய அனுமதி வழங்காத காரணத்தால் பல மாதங்களாக இந்தக் குடும்பத்தினர் வருவாயின்றி பரிதவித்து வருகின்றனர். எனவே, திருவிங்கோய்மலை பகுதியில் மணல் அள்ளுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 
சாலைகளை செப்பனிடக்கோரி மனு: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட ஆசாத் நகரில் 38 ஆவது வார்டுக்குள்பட்ட சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் செப்பனிடும் பணி மேற்கொள்ளப்படவில்லை. புதை சாக்கடை வசதியும் செய்துதரப்படவில்லை. எனவே, புதிதாக தார்ச்சாலை அமைப்பதுடன், புதை சாக்கடை வசதியும் செய்துதர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் கிழக்கு தொகுதி தலைவர் முகமது சுஹைப் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் 38ஆவது வார்டு பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வீட்டுமனை கோரி மனு: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்துக்குள்பட்ட அரசங்குடி, தொண்டமான்பட்டி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இலவச வீட்டுமனை வழங்கக் கோரி தனித்தனியே மனு அளித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT