திருச்சி

விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை

7th Sep 2019 10:31 AM

ADVERTISEMENT

திருச்சி விமான நிலையத்தில் விமானக்கடத்தல் தடுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயங்கரவாதிகளின் சதிச் செயல்களில் மிகவும் ஆபத்தான விமானக் கடத்தல் சம்பவங்களை முறியடிக்கும் வகையில் விமானக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தனியாக போலீஸ் படை உள்ளது. விமானக் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றால் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆண்டுக்கு ஒருமுறை பயிற்சியுடன் கூடிய ஒத்திகை நிகழ்ச்சியை விமான நிலையங்களில் நடத்துவது வழக்கம். 
அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் விமானக்கடத்தல் தடுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விமானம்போல சித்தரிக்கப்பட்ட ஒரு பேருந்தை விமான நிலைய வளாகத்துக்குள் நிறுத்தி அதை பயங்கரவாதிகள் கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்று ஒத்திகை நடந்தது.
முதலில் விமானம் கடத்தப்படவிருப்பதாகவும், அதில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பயங்கரவாதிகளின் பிடியில் இருப்பது போலவும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து விமான நிலைய பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு படையினர், நிர்வாகப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவரவர் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திறம்பட செய்து விமானத்தையும் பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.
இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில் பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது எப்படி என்பது குறித்து ஒத்திகையில் விளக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய நிகழ்வு பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது. இதில் விமான நிலைய அனைத்து பிரிவு அதிகாரிகளும் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை உண்மை நிகழ்வைப் போன்றே தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT