திருச்சி

லால்குடி அருகே பள்ளி மைதானத்தைச் சூழ்ந்த பாசன நீர்: மாணவ, மாணவிகள் அவதி

7th Sep 2019 10:28 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புதூர் உத்தமனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், பள்ளி வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.
லால்குடி அருகேயுள்ள புதூர்  ஊராட்சியில் உள்ள இப்பள்ளியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இப் பள்ளி புள்ளம்பாடி வாய்க்கால் அருகே  உள்ளது.  கடந்த மாதம் 28 ஆம் தேதி முக்கொம்பு காவிரி மேலணையிலிருந்து புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்ட நிலையில், தற்போது  காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் புள்ளம்பாடி வாய்க்காலில் திறக்கும்  தண்ணீரின் அளவை 400 கன அடியிலிருந்து 500 கன அடியாக உயர்த்தினர்.
இதனால் அதிகமாக வந்த தண்ணீர் பள்ளி மைதானத்தில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த வடிகால் கால்வாய் மூலம் பள்ளி மைதானத்திற்குள் புகுந்தது. இதனால் பள்ளி மைதானம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால் ஒரு சில வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மரத்தடி நிழலில் பாடம் சொல்லிக் கொடுத்தனர். இதுகுறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில்,   எப்போதெல்லாம் புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வருகிறதோ, அப்போதெல்லாம் இப் பள்ளி மைதானத்தை நீர் சூழ்வது வாடிக்கையாக உள்ளது.  இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT