திருச்சி

"நாட்டின் பொருளாதார மந்தநிலையே பாஜக அரசின் தோல்விக்குச் சான்று'

4th Sep 2019 09:00 AM

ADVERTISEMENT

இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலையே பாஜக அரசின் தோல்விக்குச் சான்றாக இருப்பதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.
கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, உமர் பாரூக், மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநிலச் செயலர்கள் அகமது நவவி, அபுபக்கர் சித்திக், மாநில பொருளாளர் அபுதாஹிர் உள்ளிட்டோர்  ஆலோசனை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கூறியது: நமது நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மந்தநிலையைச் சந்தித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், பிரதமரின் பொருளாதார அறிவுரைக் குழு உறுப்பினர், நிதி ஆயோக் துணைத் தலைவர் என பலரும் இதுகுறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதுதொடர்பாக தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்காமல் செயல்படுகின்றனர்.  
ரிசர்வ் வங்கியிடம் பெறும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பயன்படுத்தவே திட்டமிட்டு செயல்படுகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதமாக சரிந்துள்ளது. இந்த நிலைமையை ஏற்றுக் கொண்டு அதை நேர்மையுடன் எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும். மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதாலேயே தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமலுமே பிரதான காரணமாகிவிட்டன. காஷ்மீரில் தொடர்ந்து அடக்குமுறை நீடித்து வருகிறது. காஷ்மீர் மக்களின் கருத்தை கேட்காமலேயே சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை.
இதேபோல, அஸ்ஸாம் மாநிலத்தில் 19 லட்சம் மக்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கியிருப்பதும் ஜனநாயக விரோதம்.  உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றார் அவர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT