திருச்சி

சீல் வைக்கப்பட்ட ஹோட்டலில் பொருள்கள் ஜப்தி: திருச்சி மாநகராட்சி நடவடிக்கை

4th Sep 2019 09:02 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சிக்கு பல லட்சம் வாடகை நிலுவை வைத்திருந்ததாக சீல் வைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்த பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனர்.
திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பேருந்து நிலையத்தில் பல்வேறு கடைகள் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்று கட்டடத்தின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்தி வந்தது. ஆனால், பல ஆண்டுகளாக மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தவில்லை. வாடகை நிலுவை ரூ. 80 லட்சத்துக்கும் மேல் சென்றதால் அதை வசூலிக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியது.
கடந்த மார்ச் மாதம் இந்த ஹோட்டலுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி பணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதன் பிறகும் வாடகை நிலுவையை செலுத்தவில்லை. இதையடுத்து ஹோட்டலில் உள்ள பொருள்களை ஜப்தி செய்யவும், கடையை வேறு நபர்களுக்கு வாடகைக்கு விடவும்  உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் பிரிவினருக்கு மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
இதன்பேரில், மாநகராட்சி உதவி ஆணையர் தயாநிதி தலைமையிலான  ஊழியர்கள், மத்திய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் பிரிக்கப்பட்டு ஹோட்டலில் இருந்த மேஜை, நாற்காலிகள், இருக்கைகள், பாத்திரங்கள், மின்னணு சாதனங்கள் உள்ள தளவாட பொருள்கள் அனைத்தையும் ஜப்தி செய்து மாநகராட்சி அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக, கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலுவைத் தொகையை செலுத்தினால் பொருள்கள் திரும்ப வழங்கப்படும். இல்லையெனில் பொருள்கள் ஏலம் விடப்பட்டு கட்டண நிலுவைக்கு வரவு வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT