திருச்சி

சந்திரன், செவ்வாய்க்கிரக ஆய்வுகளில் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் முக்கிய பங்கு: விண்வெளித் துறை ஆய்வக விஞ்ஞானி விஜயன் பேச்சு

4th Sep 2019 08:59 AM

ADVERTISEMENT

சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரக ஆய்வுகளில் தொலையுணர்வு செயற்கைக் கோள்கள் முக்கியப் பங்காற்றி வருவதாக இந்திய விண்வெளித் துறையின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானி எஸ். விஜயன் தெரிவித்தார்.
பாரதிதாசன் பல்கலைக் கழக தொலையுணர்வுத் துறையும், இந்திய தேசிய அறிவியல் அகாதெமியும் இணைந்து சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் தொலை உணர்வு செயற்கைக் கோள் படங்கள் என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவை செவ்வாய்க்கிழமை நடத்தின.
இந்த நிகழ்வில், இந்திய விண்வெளித் துறையின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானி எஸ். விஜயன் பேசியது:
சந்திரன் குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகின்றன. முதன் முதலில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அமெரிக்கா சாதனை படைத்தது. இந்தியாவும் சந்திரனை பற்றிய ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 
கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண் கலத்தை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொண்டதில் அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் சந்திரயான்-2 விண்கலத்தை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது. 
இதேபோல, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றன. மொத்த முயற்சியில் 40 சதவிகிதம் மட்டுமே வெற்றி பெறுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவிக்கிறது. இருப்பினும் இன்று வரை ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
பூமிக்கும் செவ்வாய்க்கும் இடைபட்ட தூரம் காரணமாக இந்த இரு கிரகங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் கால தாமதம் ஏற்படும். உதாரணமாக விண்கலம் தரையிறங்கியவுடன் பூமிக்கு செய்தி அனுப்பும். ஆனால் 6 நிமிடங்களுக்கு பிறகே இந்தத் தகவலை நாம் பெறமுடியும். இந்த தகவல் பரிமாற்றத்தில் தொலை யுணர்வு செயற்கைக் கோள் பங்களிப்பு மகத்தானது. தொலை யுணர்வு செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் ஆய்வுக்கான அடித்தளமாகவும், வலுசேர்ப்பதாகவும் அமைந்துள்ளன. துல்லியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உள்ளவற்றை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது என்றார் அவர்.
இந்த நிகழ்வுக்கு, தொலை உணர்வுத் துறை தலைவர் க. பழனிவேல் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் ஜே. சரவணவேல், ஏ. பாலுக்கரசு, டி. ரமேஷ், சி. லட்சுமணன், ஏ. முத்தமிழ்ச்செல்வன் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள், மாணவர், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT