திருச்சி

"குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் நவீன முறைக்கு விவசாயிகள் மாற வேண்டும்'

4th Sep 2019 09:02 AM

ADVERTISEMENT

குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் நவீன தொழில்நுட்ப முறைக்கு விவசாயிகள் மாற வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
திருச்சியை அடுத்த சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நீர் மேலாண்மை (ஜல் சக்தி அபியான்) விழிப்புணர்வு, உழவர் பெருவிழாவில் மேலும் அவர் பேசியது:
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் உழவு செய்யும் நில அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருக்கும் நிலங்களைப் பயன்படுத்தி புதிய தொழிற்நுட்பங்கள், பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, விவசாயிகளின் நிலங்களிலேயே வயல்வெளி ஆய்வுத்திடல் மற்றும் முதல் நிலை செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்படுகிறது. 
மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்ப தொழிற்நுட்பங்களை மதிப்பீடு செய்தல்,சீராக்குதல், செயல் விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. தரமான விதைகள், நாற்றுகள், இடுபொருட்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 
வேளாண் அறிவியல் நிலையம் மூலம் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நீர் மேலாண்மை விழிப்புணர்வு, மாவட்ட அளவிலான உழவர் பெருவிழா ஆகியவை நடத்தப்படுகின்றன.  வறட்சி, மழை பொய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீர் பற்றாக்குறை தற்போது  விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. 
எனவே, இந்த ஜல்சக்தி அபியான் என்னும் நீர் மேலாண்மை திட்டம் அவசியமாகிறது. 
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஜூலை 15 முதல் செப்.15 வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
குறிப்பாக மாவட்டத்தில் உள்ள 21 ஊராட்சிகளில் கடந்த இரு மாதங்களாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில், புதிய தொழில்நுட்பங்களின் மூலம் நீரின் பயன்பாட்டுத் திறன் அதிகரித்தல், குறைந்த நீர் செலவில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகள், நீர்வள பாதுகாப்பிற்கான சம உயர வரப்புகள் அளித்தல், விவசாய கழிவுப் பொருள்களின் மறு பயன்பாடு,  நகர்ப்புறங்களில் மழைநீர் சேமிப்பு, கசிவு நீர் குட்டைகள் அமைத்தல், வெள்ள நீர் தடுப்பணைகள் அமைத்தல், ஆற்று மணல் போர்வை அமைத்தல் ஆகியவை முக்கியப் பணியாக உள்ளது. அதுபோல், கோடை உழவு, குறுக்கு உழவு மழைநீர் வடிகால் குறும்படுக்கைகள் அமைத்தல், நீர் பிடிப்பு பகுதி அடிப்படையில் மண் காத்தல் ஆகிய தொழிற்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் குறைந்த நீரில் அதிக மகசூலை பெறும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறவேண்டும். வேளாண் அதிகாரிகள், விஞ்ஞானிகள் அறிவுறுத்தும் தொழில்நுட்பங்களை கடைபிடித்து புதிய பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றார். 
அமைச்சர் எஸ். வளர்மதி பேசியது:  நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு மத்திய,  மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இதில், நீர்வழி தடங்கள் தூய்மைப்படுத்தி நீர் சேகரித்தல், வீணாதலைக் தடுத்தல், மழைநீரை சேமித்தல், பழமை வாய்ந்த நீர் நிலைகளைப் புதுப்பித்தல், குளம் குட்டைகளைப் புதுப்பித்தல், மறு சுழற்சி செய்யக்கூடிய கட்டமைப்புகளை மேம்படுத்துதல், நீர் பிடிப்பு பகுதி மேம்பாடு, மரக்கன்று நடுதல் ஆகியவை மூலம் நீர் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வேளாண் அதிகாரிகள், விஞ்ஞானிகள், விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து நீர் மேலாண்மை திட்டங்களில் செயல்படவேண்டும் என்றார்.
ஆட்சியர் சு. சிவராசு பேசியது:  மழையால் 12 சதவீத நீர்தான் நிலத்துக்குள் செல்லமுடியும். அதுபோல், மழைநீரை 20 சதவீதம் சேமித்து வைக்கலாம். ஆனால், அனைத்து நீரையும் சேமித்து வைப்பது கடினம். நகரமயமாதல், சூழல் மாற்றம், தொழிற்சாலை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு நீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால், வரும் காலங்களில் நீர் அதிகம் தேவைப்படும் சூழல் அதிகரிக்கும். எனவே,  நவீன தொழிற்நுட்ப முறைகளை பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் நீர் மேலாண்மையில் வெற்றி காணவேண்டும் என்றார். 
தொடர்ந்து, அமைச்சர்கள் விவசாயம் தொடர்பான பயிற்சி கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.பின்னர், நீர் மேலாண்மை முறையில் விவசாயம் செய்து வரும் சிறுகமணி சரவணன் கௌரவிக்கப்பட்டார். வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான், வேளாண் இணை இயக்குநர் ரா. சந்தானகிருஷ்ணன், நேர்முக உதவியாளர் (வேளாண்) சாந்தி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வர் பூ. மாசிலாமணி, குமுளுர் வேளாண் பொறியியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வர் வெ. திருப்பதி, சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் லெ. சித்ரா, சிறுகமணி அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநுர் (மண்ணியல்) வெ. தனுஷ்கோடி உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT