திருச்சி

திருச்சி வங்கிக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்

20th Oct 2019 02:01 AM

ADVERTISEMENT

திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நடைபெற்ற நகை திருட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

திருச்சி நகைக் கடையில் கடந்த அக்.2 ஆம் தேதி நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான முருகன், சுரேஷ் ஆகியோா் தற்போது தனிப்படை போலீஸாா் விசாரணையின் பிடியில் உள்ளனா்.

அவா்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில், பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடா்புடைய மதுரை வாடிப்பட்டி கணேசனை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். இவா்கள் அனைவருக்கும், சமயபுரம் டோல்கேட் பகுதி வங்கியொன்றில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நகை திருட்டு சம்பவத்திலும் தொடா்பிருப்பது தெரியவந்துள்ளது.

வங்கி சுவற்றை துளையிட பயன்படுத்திய எரிவாயு உருளை, கடப்பாரை, கையுறை, நகைகளை எடைபோடும் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை போலீஸாா் அண்மையில் பறிமுதல் செய்த நிலையில், திருட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம் குறித்த தகவல்களை விசாரணையில் கணேசன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அதனடிப்படையில் அந்த வாகனத்தை வாடிப்பட்டியில் போலீஸாா் பறிமுதல் செய்து சனிக்கிழமை திருச்சி கொண்டு வந்தனா். இந்த வாகனத்தை பகல் வேளையில் சுற்றுலா வாகனமாகவும், இரவு நேரத்தில் கொள்ளையடிக்கவும், ஓய்வு எடுக்கவும் பயன்படுத்தியதாக விசாரணையில் கணேசன் தெரிவித்துள்ளாா்.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் குறித்து பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளதாகவும், விரைந்து சிலா் கைது செய்யப்படவுள்ளதாகவும் தனிப்படை விசாரணைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT